/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையா நீடிப்பார்; தேஷ்பாண்டே நம்பிக்கை
/
சித்தராமையா நீடிப்பார்; தேஷ்பாண்டே நம்பிக்கை
ADDED : ஜூலை 02, 2025 09:19 AM

- நமது நிருபர் -
கர்நாடக காங்கிரசில் தலைவர், மூன்று தடவை அமைச்சர், ஒன்பது தடவை எம்.எல்.ஏ.,வாக கோலோச்சியவர் தேஷ்பாண்டே, 76. தற்போது எந்த பதவியிலும் இல்லை. இருந்தாலும், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளராக காண்பித்துக் கொள்கிறார். அரசியலில் அதிரடி காட்டாமல் 'சித்தன் போக்கு... சிவம் போக்கு...' என்பது போல், 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என்ற ரீதியில் உள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின், கார்வாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 137 பேரும் ஒற்றுமையாக உள்ளோம். நாங்கள் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறோம். அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றுவது குறித்து, இதுவரை எந்த விவாதமும் நடக்கவில்லை. ஐந்து ஆண்டுகளும் அவரே முதல்வராக இருப்பார்.
முதல்வர் மாற்றம் நடக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறி வருகிறார். அவரது நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. பதவியை தக்கவைத்துக் கொள்ள ஏதேதோ பேசுகிறார்.
சில எம்.எல்.ஏ.,க்கள் மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை என்று அதிருப்தி அடைந்துள்ளனர். சிலருக்கு அமைச்சர், மாநில தலைவர் பதவி மீது ஆசை உள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. ஆனால், ஊடகம் முன் பகிரங்கமாக பேசுவது தவறு.
எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னையை, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை உள்ளது. பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நல்ல மனிதர். அவருக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைக்குமா என்று எனக்கு தெரியாது. அது கட்சி மேலிடத்தின் முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.