/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விரக்தி!: சித்தராமையா நினைக்கும் வரை முதல்வராக இருக்கட்டும்: டில்லியில் துணை முதல்வர் சிவகுமார் திடீர் அறிவிப்பு
/
விரக்தி!: சித்தராமையா நினைக்கும் வரை முதல்வராக இருக்கட்டும்: டில்லியில் துணை முதல்வர் சிவகுமார் திடீர் அறிவிப்பு
விரக்தி!: சித்தராமையா நினைக்கும் வரை முதல்வராக இருக்கட்டும்: டில்லியில் துணை முதல்வர் சிவகுமார் திடீர் அறிவிப்பு
விரக்தி!: சித்தராமையா நினைக்கும் வரை முதல்வராக இருக்கட்டும்: டில்லியில் துணை முதல்வர் சிவகுமார் திடீர் அறிவிப்பு
ADDED : நவ 07, 2025 05:43 AM

'ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி' என்று, சித்தராமையா, சிவகுமார் இடையில் 2023ல், காங்கிரஸ் மேலிடம் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி உறுதியான தகவல் இல்லை. கட்சி மேலிட ஒப்பந்தம் உண்மை என்றால், இம்மாதம் 20ம் தேதியுடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிகிறது.
'வரும் 21ம் தேதி சிவகுமார் முதல்வராக பொறுப்பு ஏற்பாரா' என்று, சமீபத்தில் ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு, 'உங்களுக்கு யார் சொன்னது' என்று கடுப்பாக பதில் அளித்தார் சித்தராமையா. தங்கள் தலைவரே 5 ஆண்டுகளும் முதல்வர் என்று கூறி, அவ்வப்போது சிவகுமார் தரப்பை கடுப்பு ஏற்றுகிறது சித்தராமையா அணி.
மீண்டும் ஆட்சி இம்மாதம் முதல்வர் பதவியில் மாற்றம் இருக்குமா, இருக்காதா என்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த 4ம் தேதி இரவு சிவகுமார் திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் கர்நாடக பவனில், மேகதாது அணை திட்டம் தொடர்பாக, மூத்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சிவகுமார் டில்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்த அவரது தம்பி சுரேஷ், 'சித்தராமையா எங்கள் தலைவர். அவரது தலைமையில் அடுத்த தேர்தலை சந்திப்போம். அவர் நினைக்கும் வரை முதல்வராக இருப்பார்' என்று கூறி இருந்தார்.
இதே கருத்தை, சிவகுமாரும் நேற்று டில்லியில் கூறினார்.
இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி:
கர்நாடக அரசியலில் செப்டம்பர், அக்டோபரில் புரட்சி நடக்கும் என்று, எதிர்க்கட்சியினர் கூறினர். தற்போது நவம்பர் வந்து விட்டது. நவம்பர், டிசம்பரில் எந்த புரட்சியும் இல்லை. எந்த புரட்சி நடந்தாலும் 2028 தேர்தலில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்.
பீஹார் தேர்தல் உட்பட பல பொறுப்புகளை கட்சி எனக்கு வழங்கி உள்ளது. நான் அதை சரியாக செய்கிறேன். மல்லிகார்ஜுன கார்கே உட்பட எந்த மேலிட தலைவரையும் சந்திக்கும் திட்டம் என்னிடம் இல்லை. ஓட்டு மோசடி குறித்து டில்லியில், காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் கூட்டம் நடத்தினேன். மீண்டும் கூட்டம் நடத்துவேன்.
கட்சியின் எல்லை கர்நாடகா அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று எனக்கு தெரியாது. அமைச்சரவை மாற்றம், முதல்வர் மாற்றம் குறித்து ஊடகங்கள் மட்டுமே விவாதம் நடத்துகின்றன. மாற்றம் நடக்கும் என்று நான் எப்போதாவது சொன்னேனா; முதல்வர் சொன்னாரா?
அத்துடன், ஐந்து, 10, 15 என்று எத்தனை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருக்க வேண்டும் என்று, கட்சி மேலிடம் நினைக்கிறதோ அத்தனை ஆண்டுகளும் அவர் முதல்வர் பதவியில் இருப்பார். அவர் நினைக்கும் வரை தொடரட்டும். நான் கட்சியின் ஒழுக்கமான சிப்பாய். கட்சியின் எல்லையை தாண்டி எங்கும் செல்ல மாட்டேன். கட்சி சொல்வதை நாங்கள் இருவரும் கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரம் ஆலோசனை இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், கடந்த நான்கு நாட்களுக்கு முன், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூரு வந்தார். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்களை சந்தித்து அரசின் செயல்பாடுகள், முதல்வர் பதவி குறித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சி மேலிட உத்தரவுப்படியே, சிதம்பரம் ஆலோசனை நடத்தியதாகவும், ஆலோசனையில் பெற்ற தகவல்களை, கட்சி மேலிடத்திடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், 'தலித்துக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்' என்ற குரல், காங்கிரசில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்து உள்ளது. 'சிவகுமார் கண்டிப்பாக முதல்வராக மாட்டார்' என்று, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவும் ஆரூடம் கூறி உள்ளார்.

