/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
150 திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கைது அஜ்மீர் தர்காவில் காணிக்கை செலுத்தி பிராயசித்தம்
/
150 திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கைது அஜ்மீர் தர்காவில் காணிக்கை செலுத்தி பிராயசித்தம்
150 திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கைது அஜ்மீர் தர்காவில் காணிக்கை செலுத்தி பிராயசித்தம்
150 திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கைது அஜ்மீர் தர்காவில் காணிக்கை செலுத்தி பிராயசித்தம்
ADDED : நவ 07, 2025 05:43 AM

வித்யாரண்யபுரா: பெங்களூரு உட்பட 5 மாவட்ட போலீசாரால் 150 திருட்டு வழக்குகளில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
பெங்களூரு வித்யாரண்யபுரா போலீசார் கடந்த 4ம் தேதி இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகம்படும்படியாக ஒருவர் சுற்றினார். போலீசாரை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவரை சோதனை செய்த போது, தங்க செயினை உடையில் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில், அவர் ஹாவேரியின் அஸ்லம் பாஷா, 37, என்பதும், திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்படி, அவரது வீடு, நகைக்கடைகளில் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கைக்கடிகாரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகின.
7 பிள்ளைகள் அதாவது அஸ்லம் பாஷா பெற்றோருக்கு 7 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் அஸ்லம் பாஷா உட்பட 3 பேர் திருட்டில் ஈடுபடுவதை முழு நேர தொழிலாக வைத்து உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபடும் அஸ்லம் பாஷா, காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்து துாங்கும் பெண்களின் கழுத்தில் கிடக்கும் நகைகளை பறிப்பதை தொழிலாக வைத்திருந்தார்.
நீண்ட நாட்களாக அடைத்து இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார். கதவை உடைக்க முயற்சி செய்வார். அது முடியாமல் போனால், ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து, திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஒரு இடத்தில் ஒரு முறை திருடி விட்டால், அடுத்த ஓராண்டுக்கு அந்த பக்கமே வர மாட்டார்.
காணிக்கை பெங்களூரு, பெங்களூரு ரூரல், ஷிவமொக்கா, தாவணகெரே, ஹாவேரி ஆகிய, ஐந்து மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி உள்ளார். திருடிய நகை, வெள்ளி பொருட்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை எடுத்து கொண்டு, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு, பணத்தில் ஒரு பகுதியை காணிக்கையாக செலுத்துவார்.
பின், அங்கிருந்து கோவா சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விட்டு, கடைசியாக வீட்டிற்கு சென்று கையில் இருக்கும் பணத்தை கொடுப்பார்.
பணம் காலியானதும் மீண்டும், திருட செல்வார். அஸ்லம் பாஷா கைதாகி இருப்பதன் மூலம், ஐந்து மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான 150 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது.

