/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கட்சி சின்னத்தை மாற்றுகிறார் தேவகவுடா
/
கட்சி சின்னத்தை மாற்றுகிறார் தேவகவுடா
ADDED : ஜன 14, 2026 03:14 AM
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருவதால், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, கட்சியின் சின்னத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஜனதா தளம் கட்சி உடைந்த போது, மதசார்பற்ற ஜனதா தளமான, ம.ஜ.த.,வை தேவகவுடா துவக்கினார். ஆரம்பத்தில், ம.ஜ.த.,வுக்கு டிராக்டர் சின்னம் இருந்தது. விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர், தேர்தல் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இருப்பினும், சட்டசபை தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள், டிராக்டர் வாகனங்களை போன்ற பிற சின்னங்களை பெற்றதால், சில இடங்களில் ம.ஜ.த., வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
அதாவது, சுயேச்சை வேட்பாளர்கள் சாலை உருளைகள், ஜீப்கள், ரயில் இன்ஜின்களை சின்னங்களாக பயன்படுத்தினர்.
இது, வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, வாகன சின்னங்களை பெற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கு, ம.ஜ.த.,வுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் திரும்பின.
இந்தச் சூழலில், தேவகவுடா, 2001ல் ம.ஜ.த.,வின் டிராக்டர் சின்னத்தை மாற்ற முடிவு செய்தார்.
இதனால், டிராக்டர் சின்னம், நெற்கதிரை சுமக்கும் பெண் சின்னமாக மாறியது. அன்று முதல், 24 ஆண்டுகளாக இதே சின்னத்தில் தான், ம.ஜ.த., தேர்தல்களை சந்தித்து வருகிறது.
தற்போது, ம.ஜ.த.,வின் தொடர் தோல்விகளால் தொண்டர்கள் துவண்டு போயுள்ளனர். எனவே, கட்சியின் சின்னத்தில் மீண்டும் மாற்றம் செய்ய தேவகவுடா முடிவு செய்துள்ளார்.
ஆன்மிகத்திலும், ஜோதிடத்திலும் அதித நம்பிக்கை கொண்டுள்ள தேவகவுடா, சின்னத்தில் மாறுதல் செய்வது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசித்துள்ளார்.
அதில், நெற்கதிர் சுமக்கும் பெண், மாநில மக்களின் மனதில் ஆழமாக பதித்து உள்ளது.
எனவே, சின்னத்தில் உள்ள பெண்ணுக்கு பின்னால், கூடுதலாக சக்கரத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார். சின்னத்தை மாற்றுவதற்கான முன்மொழிவை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சின்னத்தில் மாற்றம் செய்வதில், உணர்வுப்பூர்வமான கணக்கு உள்ளதாக கூறப்படுகிறது. நெற்கதிர் சுமக்கும் பெண்ணுக்கு பின்னால் சக்கரத்தை சேர்ப்பது, கட்சிக்கு அதிர்ஷ்டம் தரும் என்று தேவகவுடா நம்புகிறார்.
பொங்கலுக்கு பின்னால் சின்னத்தில் மாற்றம் செய்வதால், கட்சியில் மாற்றம் ஏற்படும் என்றும் கருதுகிறார்.
தேவகவுடா எந்த முடிவெடுத்தாலும், ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே செய்வார். அது, அவருக்கு பலனையும் தந்து உள்ளது. சின்னம் மாற்றம் விஷயம், ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் சின்னத்தை மாற்றுவதால், கண்டிப்பாக அதிர்ஷ்டம் தேடி வரும் என்று தேவகவுடா குடும்பத்தினர் நம்புகின்றனர்.
திருத்தப்படும் சின்னத்துக்கு மத்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் கிடைத்தால், உள்ளாட்சி தேர்தல்கள், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தேர்தலுக்கு, புதிய சின்னத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அ துபோன்று, 2028 சட்டசபை தேர்தலும் புதிய சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
- நமது நிருபர் -

