தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகனை முதல்வராக்க பகடை காய் உருட்டும் தேவகவுடா

 மகனை முதல்வராக்க பகடை காய் உருட்டும் தேவகவுடா

 மகனை முதல்வராக்க பகடை காய் உருட்டும் தேவகவுடா


ADDED : மார் 04, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கர்நாடகாவில், ம.ஜ.த., மாநில கட்சியாக இருந்தாலும், அக்கட்சிக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. ஒக்கலிகர் ஓட்டுகளை அதிகம் கொண்ட பழைய மைசூரு பகுதியில் மட்டுமே, அந்தக் கட்சிக்கு ஆதரவு உள்ளது. வடமாவட்டங்களில் கட்சியின் நிலை அதாள பாதாளத்தில் இருக்கிறது.

கடந்த, 2023 தேர்தலில் ம.ஜ.த.,வால், 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கட்சியின் எதிர்காலம் கருதி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தனர். 2024ல் சென்னப்பட்டணாவில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதால், அந்த தொகுதியும் ம.ஜ.த.,வின் கையை விட்டுப்போனது.

துளிர்விடும் ஆசை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், கனரக தொழில்கள் துறை அமைச்சராக, ம.ஜ.த., தேசிய தலைவரான தேவகவுடாவின் மகன் குமாரசாமி பணியாற்றி வருகிறார்.

ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்த குமாரசாமிக்கு, இன்னொரு முறை அதுவும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதல்வராக இருக்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டு உள்ளது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், 'நான், 5 ஆண்டுகள் மாநிலத்தை ஆள வாய்ப்பு கொடுங்கள்; மாநிலத்தையே மாற்றிக் காட்டுகிறேன்' என்று கூறி வருகிறார். இது கூட்டணியில் உள்ள பா.ஜ., தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

'ம.ஜ.த.,வால், 30 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. நாம் கஷ்டப்பட்டு பிரசாரம் செய்து வெற்றி பெறுவோம். குமாரசாமியை முதல்வராக அமர வைக்க வேண்டுமா' என, பா.ஜ.,வில் பேச்சு எழுந்து உள்ளது.

வாழைப்பழ ஊசி 'குழந்தை பிறப்பதற்கு முன்பே பெயர் வைத்தால் எப்படி' என்று குமாரசாமியை தாக்கிப் பேசினார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக். 'பா.ஜ., தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். எங்களில் ஒருவர் தான் முதல்வர்' என்று அறிவித்தார், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி. இதனால், கூட்டணியில் குழப்பம் உள்ளது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளனர்.

அதேநேரத்தில், குமாரசாமியை முதல்வராக்க அவரது தந்தை தேவகவுடா பகடை காயை உருட்ட ஆரம்பித்து உள்ளார்.

சமீபத்தில், விஜயபுராவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தேவகவுடா பேசும் போது, குமாரசாமியை முதல்வராக பார்க்க வேண்டும் என, எனக்கும் ஆசை தான். ஆனால், அது நம் கையிலா உள்ளது; பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மனது வைக்க வேண்டுமே என்று, வாழை பழத்தில் ஊசி குத்துவது போல நைசாக கூறியுள்ளார்.

மூன்று தொகுதிகள் பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டும் தேவகவுடா, என்ன வேண்டுமானாலும் செய்து, தன் மகனுக்கு முதல்வர் பதவி வாங்கி கொடுத்து விடுவார் என்று பேச்சு அடிபடுகிறது.

ஆனாலும், கர்நாடகா பா.ஜ., தலைவர்கள் குமாரசாமிக்கு முதல்வர் பதவி கிடைக்க, அவ்வளவு எளிதில் விட மாட்டார்கள். ஜி.பி.ஏ., மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில், ம.ஜ.த.,வுடன் கூட்டணி வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர்.

கர்நாடகாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடக்கிறது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனை பயன்படுத்தி கொண்டு மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்த வேண்டிய எதிர்க்கட்சிகள், இப்போதே முதல்வர் பதவிக்கு முட்டி மோதி கொள்வது காங்கிரசுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, 2028 தேர்தல் நேரத்தில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி நீடிக்குமா என்பதே சந்தேகம் தான். ஏனெனில், 2024 லோக்சபா தேர்தலில் ம.ஜ.த.,வுக்கு, பா.ஜ., வெறும் மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியது.

அதுபோல, 2028 சட்டசபை தேர்தலிலும் தொகுதிகள் ஒதுக்கீட்டில் பிரச்னை வரலாம். இதனால் கூட்டணி முறிய கூட வாய்ப்பு உள்ளது என்று, அரசியல் வல்லுனர்கள் பேச ஆரம்பித்து உள்ளனர்.

கூட்டணி ஆட்சி கடந்த, 2004ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 79, காங்கிரஸ் 65, ம.ஜ.த., 58 இடங்களில் வெற்றி பெற்றன. அந்த நேரத்தில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சி அமைத்தது. தரம்சிங் முதல்வராக இருந்தார். பின், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது ம.ஜ.த.,.

ஒப்பந்தபடி தன் பதவிக்காலம் முடிந்ததும், முதல்வர் பதவியை விட்டு கொடுக்காததால், ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணியும் முறிந்தது.

இதனால், மீண்டும் ஒரு முறை குமாரசாமிக்கு முதல்வர் பதவியை, பா.ஜ., விட்டு கொடுக்குமா என்பதே இப்போதைக்கு உள்ள கேள்வி.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us