ஹாசனாம்பா கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு: 2 நாள் வருவாய் ரூ.3 கோடியை தாண்டியது
ஹாசனாம்பா கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு: 2 நாள் வருவாய் ரூ.3 கோடியை தாண்டியது
UPDATED : நவ 02, 2026 12:00 AM
ADDED : நவ 01, 2026 08:04 PM
ஹாசன்: ஹாசனாம்பா கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இரண்டு நாளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஹாசனாம்பாவை தரிசனம் செய்துள்ளனர்.
கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில், ஹாசனாம்பா கோவிலும் ஒன்றாகும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இக்கோவில் திறக்கப்படுகிறது. அக்டோபர் 29ம் தேதி, கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும், பெருமளவில் வருகின்றனர்.
அதிகாலை 3:00 மணிக்கே, வரிசையில் நின்று மணிக்கணக்கில் காத்திருந்து ஹாசனாம்பாவை தரிசிக்கின்றனர். நேற்று மதியம் வரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர், தரிசனம் செய்துள்ளனர். இதன் பயனாக கோவிலின் வருவாய் அதிகரிக்கிறது. 3.60 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது.
கோவில் நிர்வாக அதிகாரி ஜெகதீஷ் கங்கண்ணனவர் கூறியதாவது:
ஹாசனாம்பாவை தரிசிக்க, மாநிலத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இரண்டே நாட்களில், கோவிலின் வருவாய் மூன்று கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 1,000 ரூபாய் டிக்கெட், 300 ரூபாய் டிக்கெட் விற்பனை, லட்டு பிரசா தம் விற்பனை மூலமாக, அதிகமான வருவாய் கிடைத்துள்ளது.
ஆன்லைன் புக்கிங் செய்ததில், 1.98 கோடி ரூபாய், நேரில் வந்து டிக்கெட் வாங்கியதில், 1.62 கோடி ரூபாய் உட்பட, 3.60 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. வரும் நாட்களில் இந்த அளவு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்மாதம், 11ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
