/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட... தடை! பெண்கள் கொலையான புகாரில் செஷன்ஸ் கோர்ட் அதிரடி 8,000க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழிக்கவும் உத்தரவு
/
தர்மஸ்தலா வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட... தடை! பெண்கள் கொலையான புகாரில் செஷன்ஸ் கோர்ட் அதிரடி 8,000க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழிக்கவும் உத்தரவு
தர்மஸ்தலா வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட... தடை! பெண்கள் கொலையான புகாரில் செஷன்ஸ் கோர்ட் அதிரடி 8,000க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழிக்கவும் உத்தரவு
தர்மஸ்தலா வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட... தடை! பெண்கள் கொலையான புகாரில் செஷன்ஸ் கோர்ட் அதிரடி 8,000க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழிக்கவும் உத்தரவு
ADDED : ஜூலை 23, 2025 08:41 AM

பெங்களூரு: தர்மஸ்தலாவில், பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், மஞ்சுநாதா கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு முன், வீரேந்திர ஹெக்டே பற்றி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில், பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் ஓடும் நேத்ராவதி ஆற்றின் கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட, பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளதாக, கோவிலின் முன்னாள் துாய்மை பணியாளர் பீமா அளித்த புகாரில், தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது.
இந்த வழக்கை விசாரிக்க, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* 'தர்மஸ்தலா பைல்ஸ்'
'பேஸ்புக், யு - டியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ரெட்டிட்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 'தர்மஸ்தலா பைல்ஸ்' என்ற பெயரில் விவாதம் நடக்கிறது. பத்திரிகைகள், செய்தி சேனல்களிலும் தினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் சில யு - டியூப் சேனல்கள், பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரத்தில், மஞ்சுநாதா கோவிலின் நிர்வாக அதிகாரியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினரை தொடர்புபடுத்தி பேசுகின்றன.
இந்நிலையில், வீரேந்திர ஹெக்டேயின் சகோதரர் ஹர்ஷேந்திர குமார், பெங்களூரு 10வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் பணி செய்த, முன்னாள் துாய்மை பணியாளர் ஒருவர், கோவில் அருகே ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையில், நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடலை புதைத்தது பற்றி அளித்த புகாரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதை ஒரு சாக்காக பயன்படுத்தி கொண்டு, கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினருக்கு எதிராக, தவறான, ஆதாரமற்ற, பொறுப்பற்ற, அவதுாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. எப்.ஐ.ஆர்.,ரிலோ அல்லது விசாரணையிலோ வீரேந்திர ஹெக்டே, குடும்பத்தினருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. இப்படி இருக்கும் போது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.
* 75,000 பேர் பணி
கடந்த 2012ல் தர்மஸ்தலாவில் நடந்த கல்லுாரி மாணவியின் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கிலும் எங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வழக்கை விசாரித்த சி.பி.ஐ., வழக்கிற்கும், எங்கள் குடும்பத்திற்கு எதிரான குற்றச்சாட்டு பொய் என்று கூறி உள்ளது.
மஞ்சுநாதா கோவில் நிர்வாகத்தின் கீழ் 75,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். 45,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், கோவில் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.
வீரேந்திர ஹெக்டே, குடும்பத்திற்கு எதிராக 4,140 யு - டியூப் வீடியோக்கள், 932 பேஸ்புக் பதிவுகள், 3,584 இன்ஸ்டாகிராம் பதிவுகள், 108 செய்தி லிங்க்குகள், 37 ரெட்டிட் பதிவுகள், 41 ரெட்டிட் மறுபதிவுகள் என 8,842 பதிவுகள் உள்ளன. மஞ்சுநாதா கோவில், வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினர் பற்றி அவதுாறு செய்தி வெளியிட, யு - டியூப் சேனல்கள், பத்திரிகைகள், செய்தி சேனல்கள் உள்ளிட்ட 338 பிரதிவாதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
* மேல்முறையீடு
இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி விஜய்குமார் ராய், மஞ்சுநாதா கோவில், வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினர் தொடர்பாக செய்தி வெளியிட சமூக வலைதளங்கள், பத்திரிகைகள், செய்தி நிறுவனங்களுக்கு, அடுத்த மாதம் 5ம் தேதி வரை தடை விதித்தார். அன்றைய தினம் மனு மீது விசாரணை நடக்க உள்ளது.
மேலும் இதுவரை வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினருக்கு எதிராக வெளியான 8,842 வீடியோக்கள், பதிவுகளை அழிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, 'தேர்ட் ஐ' என்ற யு - டியூப் சேனல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹர்ஷேந்திர குமார் தவறான தகவல் அளித்து, தடை வாங்கி இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
==========
பாக்ஸ்
* பரமேஸ்வர் மறுப்பு
தர்மஸ்தலா வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டு உள்ள, எஸ்.ஐ.டி., குழுவில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், சவும்யலதா, ஜிதேந்திர குமார் தயமா ஆகிய நான்கு பேர் உள்ளனர். இதில் இரு அதிகாரிகள், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று, உள்துறைக்கு கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மறுத்து உள்ளார். ''தர்மஸ்தலா வழக்கில் விரைவில் எஸ்.ஐ.டி., விசாரணை துவங்கும். நான்கு அதிகாரிகளும் குழுவில் உள்ளனர். யாரும் தங்களை விடுவிக்கும்படி கேட்கவில்லை. ஒருவேளை, அவர்கள் யாராவது கேட்டால், அவர்கள் விடுவிக்கப்பட்டு புதிய அதிகாரி நியமிக்கப்படுவார்,'' என்றார்.
***