/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலாவின் 13வது இடத்திலும் ஏமாற்றம்
/
தர்மஸ்தலாவின் 13வது இடத்திலும் ஏமாற்றம்
ADDED : ஆக 13, 2025 04:36 AM
மங்களூரு: தர்மஸ்தலாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 13வது இடத்தில் 18 அடி ஆழம் தோண்டியும், எலும்புக் கூடுகளோ, சந்தேகப்படும்படியான பொருட்களோ கிடைக்கவில்லை. எஸ்.ஐ.டி.,யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று, கேள்வி எழுந்துள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படுவது பற்றி எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. புகார் கொடுத்தவரை அழைத்துச் சென்று 13 இடங்களை, அடையாளம் கண்டு 'மார்க்கிங்' செய்தனர்.
கடந்த மாதம் 29ம் தேதி முதல் அடையாளம் காணப்பட்ட இடங்களில், தோண்டும் பணி நடந்தது. இதில் 6, 11வது இடங்களில் ஒரு சில எலும்புக்கூடுகள் சிக்கியதை தவிர, வேறு எங்கும் எலும்புக் கூடு சிக்கவில்லை.
அடையாளம் காணப்பட்ட 13 இடத்தில் நிறைய உடல்களை புதைத்ததாக, புகார்தாரர் கூறினார். ஆனால், அங்கு பள்ளம் தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த இடத்தின் அருகே தடுப்பணை இருந்ததால், பள்ளம் தோண்டினால் ஏதாவது பிரச்னை ஏற்படும் என்று கருதப்பட்டது.
இதனால் பூமிக்கு அடியில் என்ன உள்ளது என்பதை துல்லியமாக கணக்கிடும், ஜி.பி.ஆர்., இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
ஆனாலும் பூமிக்கு அடியில் என்ன உள்ளது என்பதை சரியாக கணிக்க முடியாததால், இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் 13வது இடம் நேற்று தோண்டப்பட்டது.
அங்கு, 18 அடி ஆழம், 22 அடி அகலத்திற்கு தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை. எஸ்.ஐ.டி., அதிகாரிகளும், புகார்தாரரும் ஏமாற்றம் அடைந்தனர். தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி விட்டு புறப்பட்டுச் சென்றனர். அடையாளம் காட்டிய 13 இடங்களை தவிர, மேலும் நான்கு இடங்களையும் புகார்தாரர் காட்டினார். அங்கும் எதுவும் சிக்கவில் லை.
புகார்தாரர் கூறுவது உண்மையா என்று, எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வரும் நாட்களில் அவர் கூறும் இடங்களில் தோண்டப்படுமா என்றும், எஸ்.ஐ.டி.,யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்றும் கே ள்வி எழுந்துள்ளது.