ADDED : ஜூன் 02, 2026 01:12 AM

- நமது நிருபர் -
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட் தாலுகா கொண்டரஹள்ளி கிராமத்தில் உள்ளது தர்மேஸ்வரா கோவில். இக்கோவிலின் முக்கிய தெய்வமாக சிவபெருமான் உள்ளார். இவரை, தர்மத்தின் அடையாளமாக போற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். இக்கோவில் கி.பி., 1065ல் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.
வரலாற்று ஆய்வாளர்கள், உள்ளூர் மக்களின் கருத்துப்படி இக்கோவில் 5,000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. புராணகால நம்பிக்கையின்படி மஹாபாரத்தில் வரும் யக் ஷ பிரஷ்னம் இந்த இடத்தில் நிகழ்ந்ததாகவும், பாண்டவர்கள் நீர் தேடி இப்பகுதிக்கு வந்ததாகவும் வரலாறு சொல்கிறது.
சிவபெருமான் இங்கு தர்மேஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தர்மத்தின் வழியில் நடப்பவர்கள் இங்கு வந்து சிவபெருமானை வேண்டினால், அவர்களுக்கு நல்லதே நடக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. நந்தி தேவர், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் சிலைகளும், பரிவார தேவதைகள் சிலைகளும் உள்ளன.
கோவில் நடை தினமும் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையிலும்; மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் திறந்து இருக்கும். கோவிலின் நுழைவாயில் பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தில் கால், கைகளை கழுவி சென்று, சிவனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
பழங்கால கோவில் என்பதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரதோஷ நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு உள்ளூர் மக்களால் நடத்தப்படுகிறது. மஹா சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள், விளக்கு பூஜை நடக்கும். பவுர்ணமி நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
