ஒரே குடும்பத்தின் நால்வர் மாயம் தற்கொலை செய்து கொண்டனரா?
ஒரே குடும்பத்தின் நால்வர் மாயம் தற்கொலை செய்து கொண்டனரா?
ADDED : ஆக 20, 2026 11:49 PM

தாவணகெரே: ஒரே குடும்பத்தின் நால்வர், மர்மமான முறையில் காணாமல் போகினர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
தாவணகெரே நகரின் பனசங்கரி, லே - அவுட்டில் வசிப்பவர் ரமேஷ்குமார், 38. இவரது மனைவி ஜெயசீலா, 36. தம்பதிக்கு ஹிதேஷ், 9, என்ற மகனும், பிரேர்ணா, 3, என்ற மகளும் உள்ளனர்.
ரமேஷ்குமார் ஒப்பந்ததாரராக பணியாற்றுகிறார். அது மட்டுமின்றி, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருந்தார். பொதுமக்களிடம் இருந்தும், பணம் வசூலித்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார்.
சமீப நாட்களாக, ஷேர் மார்க்கெட்டில், பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு ஏராளமான பணம் கொடுக்க வேண்டியிருந்தது. பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார்.
ஆகஸ்ட் 14ம் தேதியன்று, தாய் லலிதம்மாவுக்கு போன் செய்த ரமேஷ்குமார், விடுமுறை காரணமாக பெங்களூரு செல்வதாக கூறினார். அதன் பின் மகன் போன் செய்யாததால், லலிதம்மா போன் செய்தார். ஆனால் மகன், மருமகளின் மொபைல் போன்கள், தொடர்ந்து 'சுவிட்ச் - ஆப்' செய்யப்பட்டிருந்தன.
பீதியடைந்த லலிதம்மா, நேற்று காலை மகனின் வீட்டுக்கு வந்தார். கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. தன்னிடம் இருந்த மாற்றுச்சாவியால், கதவை திறந்து உள்ளே சென்றார். மகன், மருமகளின் மொபைல் போன்கள் வீட்டிலேயே இருந்தன. மகன் எழுதி வைத்திருந்த கடிதமும் கிடைத்தது.
அதில் 'கடன் தொல்லையால், நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்' என கூறப்பட்டிருந்தது.
வீட்டு வளாகத்திலேயே காரும், பைக்கும் நின்றிருந்தன. ரமேஷ்குமார் தன் மனைவி, பிள்ளைகளுடன் ஆட்டோவில் சென்றது தெரிந்தது. மகன், மருமகள், பேரப்பிள்ளைகளை காணாமல், கலக்கம் அடைந்த லலிதம்மா, வித்யாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
காணாமல் போன போலீசாரும் நால்வரை தேடுகின்றனர்.
இவர்கள் நால்வரும், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.
