ADDED : செப் 08, 2026 04:01 AM
பெங்களூரு: பெங்களூரு நகரில் மட்டும் 70 முதல் 80 ஆயிரம் மஞ்சள் பலகை கொண்ட டாக்சிகள் இயங்கி வருகின்றன. இந்த டாக்சிகள், அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக போக்குவரத்து துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இது தொடர்பாக ஆலோசனை நடத்திய துறை அதிகாரிகள், புதிய வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளனர்.
அதன்படி, டாக்சி ஓட்டுநர்கள், தங்கள் சொந்த கட்டண விதியின் அடிப்படையில் பயணியரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது.
அதற்கு பதிலாக போக்குவரத்து துறையால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே பின்பற்ற வேண்டும். டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தி, அதில் குறிப்பிடும் பயண கட்டணத்தையே பயணியரிடம் வசூலிக்க வேண்டும்.
பழைய மஞ்சள் பலகை கார்களின் தகுதி சான்றிதழை புதுப்பிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக கட்டண மீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
10 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்புள்ள டாக்சிகளுக்கு, முதல் 4 கி.மீ.,க்கு குறைந்தபட்ச கட்டணம் 100 ரூபாயாகும். அதற்கு பின், ஒவ்வொரு கூடுதல் கி.மீ.,க்கும் பயணியர் 24 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள டாக்சிகளுக்கு முதல் 4 கி.மீ.,க்கு 115 ரூபாயும்; அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கு 28 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம்.
அதேபோல, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள டாக்சிகளுக்கு முதல் 4 கி.மீ.,க்கு 130 ரூபாயும்; அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.,க்கு 32 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம்.
பயணத்தின் போது பயணியரின் வேண்டுகோளை ஏற்று காத்திருப்பதற்கு கட்டணம் மாற்றப்பட்டு உள்ளது.
அதன்படி, ஐந்து நிமிடம் வரை காத்திருந்தால் இலவசம். அதற்கு மேல் ஒவ்வொரு நிமிடத்துக்கும் தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதுபோன்று அதிகாலை 12:00 முதல் 6:00 மணி வரை இயங்கும் டாக்சிகள், கூடுதலாக 10 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம்' என்று குறிப்பிட்டு உள்ளது.
