'கே.பி.எஸ்.சி.,யை மூடுவது குறித்து விவாதம்: சவுஜன்யா விசாரணையில் தலையீடு இருக்காது '
'கே.பி.எஸ்.சி.,யை மூடுவது குறித்து விவாதம்: சவுஜன்யா விசாரணையில் தலையீடு இருக்காது '
ADDED : செப் 23, 2026 03:00 AM

பெங்களூரு: ''கே.பி.எஸ்.சி.,யை மூடுவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் விவாதித்து வருவதாகவும், மாணவி சவுஜன்யா கொலை வழக்கின் மறுவிசாரணையில் யாருடைய தலையீடும் இருக்காது,'' என்று முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு, நாங்கள் நம்பி தேர்ந்தெடுத்த அதிகாரிகள் தான் முறைகேடு செய்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் அனைத்து ஆவணங்களையும் சேகரித்துள்ளனர். ஒரு நாள் எல்லாம் வெளியே வரும்.
கே.பி.எஸ்.சி., முறைகேடு பற்றி விசாரிக்க, எஸ்.ஐ.டி., அமைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நான் வரவேற்கிறேன். ஆனால் விசாரணை அதிகாரிகளை நியமிக்கும் சுதந்திரத்தை, அரசுக்கு வழங்கியிருக்க வேண்டும். இதுதொடர்பாக பிற மாநிலங்களில் இருந்து, எனக்கு அழைப்பு வருகிறது. இதுகுறித்து சட்ட வல்லுனர்கள் கருத்துகளை கேட்கிறேன்.
அரசு வேலைக்காக படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் எங்களுக்கு முக்கியம். கே.பி.எஸ்.சி.,யை மூடுவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் விவாதித்து வருகிறேன்.
மாநிலத்தின் 200 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான தேவையான அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கிறது. விவசாயிகளுடன் பேசியுள்ளேன். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது, முதலில் எங்களுக்கு தோன்றிய சிந்தனை. நாங்கள் ஆதரவு கொடுத்ததால் தான் குமாரசாமி முதல்வர் ஆனார். அதனால் தான் அவரால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய முடிந்தது.
கல்லுாரி மாணவி சவுஜன்யா வழக்கில், மறுவிசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் யாருடைய தலையீடும் இருக்காது. விசாரணை சட்டப்படி நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
