மகன்களுக்கு முக்கிய பதவி கார்கே, சித்து மீது அதிருப்தி
மகன்களுக்கு முக்கிய பதவி கார்கே, சித்து மீது அதிருப்தி
ADDED : ஜூன் 06, 2026 03:56 AM

பெங்களூரு: சி வகுமார் அமைச்சரவையில் கார்கே, சித்தராமையா மகன்களுக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர், 12 அமைச்சர்களின் இலாகாக்களுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் இரவு அனுமதி வழங்கினார்.
யார், யாருக்கு என்னென்ன துறைகள் என்ற விபரம் வருமாறு:
முதல்வர் சிவகுமார்: நிதி, சட்டசபை விவகாரம், நிர்வாக பணியாளர் சீர்திருத்தம், உளவு துறை மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
துணை முதல்வர் பரமேஸ்வர்: வருவாய், விளையாட்டு
அமைச்சர்கள் முனியப்பா: உணவு மற்றும் பொது விநியோகம்
ஜார்ஜ்: மின்சாரம், சுற்றுலா
எம்.பி.பாட்டீல்: சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி
சதீஷ் ஜார்கிஹோளி: பொதுப்பணித்துறை
கிருஷ்ண பைரே கவுடா: பெங்களூரு நகர வளர்ச்சி துறை. ஜி.பி.ஏ.,வின் 5 மாநகராட்சிகள், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், மெட்ரோ
பிரியங்க் கார்கே: உள்துறை, தகவல் தொழில்நுட்பம்
காதர்: சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
ஈஸ்வர் கன்ட்ரே: கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
யதீந்திரா: நகர்ப்புற மேம்பாட்டு துறை
பைரதி சுரேஷ்: போக்குவரத்து
சரணபிரகாஷ் பாட்டீல்: மருத்துவ கல்வி மற்றும் திறன் மேம்பாடு
சட்டம் - ஒழுங்கு பிரச்னை அமைச்சர்ன் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன்.
சித்தராமையா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பரமேஸ்வர், 'உள்துறை எனக்கு வேண்டாம்' என்று கூறியுள்ளதால், அவருக்கு வருவாய் துறை கொடுத்து உள்ளனர்.
இதனால் பிரியங்க் கார்கேவுக்கு உள்துறை அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை நிலைநாட்டும் முக்கிய துறை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல, முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையாவும், தனது மகன் யதீந்திராவுக்கு வலுவான துறையான நகர்ப்புற மேம்பாட்டு துறையை வாங்கி கொடுத்து உள்ளார்.
நகர் புறங்களுக்கு குடிநீர் வினியோகம், மாவட்டங்களில் உள்ள நகர் புற மேம்பாட்டு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் இந்த துறையின் கீழ் வரும்.
யதீந்திராவுக்கு அரசியலில் அவ்வளவாக அனுபவம் இல்லை. ஒரு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இப்போது எம்.எல்.சி.,யாக உள்ளார்.
மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் இருக்கும் போது, போதிய அனுபவம் இல்லாத பிரியங்க் கார்கே, யதீந்திராவுக்கு முக்கிய அமைச்சர் பதவி கிடைத்து இருப்பது, கட்சியினரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே, சித்தரா மையாவுக்கு எதிராக முணு முணுக்க துவங்கியுள்ளனர்.
