ADDED : ஜூன் 06, 2026 03:57 AM

பெங்களூரு: தாவணகெரே மற்றும் துமகூரு மாவட்டங்களில் பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் ஆங்காங்கே பதுங்கி வாழும், பயங்கரவாத அமைப்பினர் முக்கிய நகரங்களில் பயங்கரவாதத்தை நிகழ்த்த, சதித்திட்டம் தீட்டுகின்றனர். இத்தகையவர்கள் மீது, உளவுத்துறை கண் வைத்துள்ளது.
எங்கெங்கு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்பதை, அடையாளம் கண்டுபிடித்து எச்சரிக்கிறது. அதே போல, கண்காணித்ததில் கர்நாடகாவின் துமகூரு மற்றும் தாவணகெரேவில், பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் வசிப்பது குறித்து, கர்நாடகா போலீஸ் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள், பல இடங்களில் சோதனை நடத்தினர். தாவணகெரேவின், பீடி லே - அவுட்டில் வசிக்கும் ஜமீர்கான், 22, துமகூரு நகரின், ஸ்ரீராமநகரில் வசித்த அல்லா பக்ஷு, 24, கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய உளவுத்துறை அளித்த தகவலின்படி, ஜமீர்கான், அல்லா பக்ஷு கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐ.எஸ்.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.
ஹிந்தியில் வெளியான, துரந்தர் திரைப்படத்தில் நாயகன், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சென்று, எதிரிகளை அழிப்பதை போல, ஜமீர்கானும், அல்லா பக்ஷும் இந்தியாவில் பயங்கரவாதம் நிகழ்த்த, சதி திட்டம் தீட்டினர்.
நாட்டில் குண்டுவெடிப்பு நடத்த, திட்டம் தீட்டினர். இவர்கள் இருவரையும், பாகிஸ்தான் உளவாளிகளாக, பயங்கரவாதிகள் பயன்படுத்தினர். 'வாட்ஸாப், இன்ஸ்டாகிராம்' உட்பட, பல சமூக வலைதளங்கள் மூலம், நிரந்தர தொடர்பில் இருந்தனர். இந்தியாவில் வசிக்கும், முஸ்லிம் இளைஞர்களை பயன்படுத்தி, ஐ.எஸ்.எஸ்., பயங்கரவாத அமைப்பை விஸ்தரிக்க முயற்சித்தனர்.
மும்பையில், தொழிலதிபர் ஒருவரை கொலை செய்யும் படி, அல்லாபக்ஷு, ஜமீர்கானிடம் கூறினர். அவர்களும் அதற்காக தயாராகினர். அதற்குள் இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
மத்திய உளவுத்துறைக்கு, துமகூரின் நபர் ஒருவர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளதாக, தகவல் வந்தது. அதன்பின் அந்நபர் கண்காணிக்கப்பட்டார்.
அவர் சமூக வலைதளங்களில், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, கருத்து தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு 'மெசேஜ், சாட்டிங்' செய்வதை கண்டுபிடித்தனர். இது குறித்து, கர்நாடக உளவுத்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது.
அதன் பின், துமகூரு போலீசார் உஷாராகி, அல்லாபக்ஷு என்ற நபரின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். அவருக்கு எதிரான சாட்சியங்கள் கிடைத்தவுடன், அவரை கைது செய்து விசாரித்த போது, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. இவர் கொடுத்த தகவலின்படி, தாவணகெரேவுக்கு சென்ற போலீஸ் படை, ஜமீர் கானை கைது செய்தனர்.
பயங்கரவாத அமைப் பினருடன் தொடர்பு கொண்ட இவர், தாவணகெரேவில், கட்டுமான பணி செய்து வந்தார். ஹாசன் உட்பட, பல்வேறு இடங்களுக்கு கூலி வேலைக்கு சென்றார்.
தன் தாய், தந்தை, இரண்டு சகோதரர்களுடன், தாவணகெரேவில் வசிக்கிறார். இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் மூலம், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இவர், அமைப்பினர் உத்தரவுபடி செயல்பட்டு வந்தார்.
துமகூரில் கைதான அல்லாபக்ஷும், கூலி வேலை செய்து வருகிறார். நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சமூக வலைதளங்களில் தகவல் 'போஸ்ட்' செய்தார். இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
கர்நாடகா முழுதும் சோதனை நடத்தவும், முடிவு செய்துள்ளோம். மேலும் பல பயங்கரவாதிகள் சிக்குவர் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
