அதிருப்தி எம்.எல்.ஏ., மங்கள் வைத்யாவுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கி சமரசம்
அதிருப்தி எம்.எல்.ஏ., மங்கள் வைத்யாவுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கி சமரசம்
ADDED : ஆக 18, 2026 02:52 AM

பெங்களூரு: அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மங்கள் வைத்யாவுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கி, காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையிலான அமைச்சரவை விஸ்தரி ப்பில், உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் தொகுதி எம்.எல்.ஏ., மங்கள் வைத்யாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், அமைச்சரவை பதவியேற்பு நாளன்று காலையில், தாவணகெரே வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், பெங்களூரில் நடந்த அவசரக் கூட்டத்தில் புகுந்து ஆட்டத்தை குலைத்தார்.
முரண்டு 'எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனில், என் மகன் சமர்த்தின் எம்.எல்.ஏ., பதவி; என் மனைவி பி ரபாவின் லோக்சபா எம்.பி., பதவி; என் எம்.எல்.ஏ., பதவி என குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வோம்' என, மிரட்டல் விடுத்து, அமைச்சர் பதவியை பெற்றார். இதனால், மங்கள் வைத்யாவின் வாய்ப்பு பறிபோனது.
இதனால், மங்கள் வைத்யா அதிருப்தி அடைந்தார். அவருக்கு காங்கிரஸ் மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆறுதல் கூறினார்.
இதற்கிடையில், துணை சபாநாயகர் பதவியில் அமர்த்தப்படவிருந்த எம்.எல்.ஏ., பொன்னண்ணா, முதல்வர் சிவகுமாரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதனால், துணை சபாநாயகர் பதவிக்கு வேறொருவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
திடீர் மாற்றம் இந்நிலையில், துணை சபாநாயகர் பதவிக்கு மங்கள் வைத்யாவை நியமிக்க, கட்சி மேலிடம் முடிவு செய்தது. இந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று விதான் சவுதாவில், முதல்வர் சிவகுமார் முன்னிலையில் சட்டசபை செயலர் விசாலாட்சியிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் மங்கள் வைத்யா துணை சபாநாயகராக தேர்வு செய்வது உறுதியாகி விட்டது.
இதேபோல, அமைச்சர் பதவி எதிர்பார்த்த நடிகையும், மூத்த உறுப்பினருமான உமா ஸ்ரீயை சமாதானப்படுத்தி, மேல்சபை துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தனர்.
