/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மோசமான சாலையால் முதுகு வலி ரூ.50 லட்சம் கேட்கும் டாக்டர்
/
மோசமான சாலையால் முதுகு வலி ரூ.50 லட்சம் கேட்கும் டாக்டர்
மோசமான சாலையால் முதுகு வலி ரூ.50 லட்சம் கேட்கும் டாக்டர்
மோசமான சாலையால் முதுகு வலி ரூ.50 லட்சம் கேட்கும் டாக்டர்
ADDED : மே 20, 2025 11:35 PM
பெங்களூரு : 'மோசமான சாலையில் பயணம் செய்ததால், முதுகு வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்து கொள்வதால், வலி தாங்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனக்கு 50 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என்று, பெங்களூரு மாநகராட்சிக்கு, டாக்டர் ஒருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பெங்களூரு மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் சாலை பள்ளமும் ஒன்று. நகரில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. சாலை பள்ளங்களால் விபத்தில் சிக்கி, மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தன. நகரில் உள்ள ஒரு சாலையில் கூட, சுமுக போக்குவரத்து செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
சாலை பள்ளங்களை மூட துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது நகரில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில், பள்ளங்கள் மேலும் அதிகரித்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு ரிச்மண்ட் டவுனில் வசிக்கும் டாக்டர் கிரண், 43, என்பவர் தனது வக்கீல் லவின் மூலம் மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:
பெங்களூரு நகரில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிக்க மாநகராட்சி தவறிவிட்டது. நான் வரி செலுத்தும் குடிமகன். நகரில் உள்ள மோசமான சாலைகளில் ஆட்டோ, பைக்கில் பயணம் செய்ததன் மூலம் எனக்கு கழுத்து, முதுகு வலி ஏற்பட்டு உள்ளது.
வலிக்கு சிகிச்சை எடுத்து கொள்ள ஐந்து முறை மருத்துவமனைக்கு சென்று உள்ளேன். கடுமையான வலியை போக்க, வலி நிவாரண ஊசி போடப்பட்டது.
வலியை போக்க பல மருந்துகளை எடுத்து கொள்கிறேன். ஆனாலும் வலியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுகிறேன். மன உளைச்சலால் எனக்கு சரியாக துாக்கம் வரவில்லை. இது எனது உடல்நலம், அன்றாட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சியின் அலட்சியமே எனது இந்த நிலைக்கு காரணம். எனக்கு 15 நாட்களுக்குள் 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்வேன். லோக் ஆயுக்தா, மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்வேன்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.