UPDATED : அக் 09, 2026 04:14 AM
ADDED : அக் 08, 2026 11:36 PM

துமகூரு: மாவட்ட மருத்துவமனைகள் ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் பேசுவதை கவனிக்காமல், பெண் டாக்டர் மொபைல் போனில், முகநுாலை பார்த்து கொண்டிருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
மாவட்ட மருத்துவமனைகள் முன்னேற்ற பரிசீலனை கூட்டம், சுகாதாரத்துறை அமைச்சர் காதர் தலைமையில், துமகூரில் நேற்று காலை நடந்தது. துமகூரு மாவட்ட, அனைத்து தாலுகாக்களின் மருத்துவமனைகள் செயல் திறனை மேம்படுத்துவது குறித்து, அமைச்சர் ஆலோசனை நடத்தி, டாக்டர்கள், மருத்துவ அதிகாரிகளுக்கு, தேவையான ஆலோசனைகள் கூறினார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கூட்டம் நடந்தது. ஆனால் துமகூரு மாவட்ட மருத்துவமனையின் பல் டாக்டர் விஜயலட்சுமி, அமைச்சர் பேசியதை பொருட்படுத்தாமல், மொபைல் போனில் முகநுாலை பார்ப்பதில் ஈடுபட்டிருந்தார்.
அமைச்சரின் முன்னிலையிலேயே, பெண் டாக்டர் மொபைல் போனில் மூழ்கியிருந்ததை பார்த்தவர்கள், அதை தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
