ADDED : ஜூலை 12, 2025 10:59 PM
மங்களூரு: மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற டாக்டரை மங்களூரு போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர் குமார் ரெட்டி, நேற்று அளித்த பேட்டி:
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சம்பவங்கள் நடக்கின்றன. தங்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையாக உள்ளனர். அவர்களை மீட்டுத்தருவதுடன், போதைப்பொருள் கிடைக்க காரணமாக இருப்போர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, சில பெற்றோரே, எங்களிடம் புகார் அளித்தனர்.
இதன்படி, போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த நகர போலீசார், சிறப்பு நடவடிக்கையில் இறங்கினர். சமீபத்தில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, டாக்டர் பிரஜ்வல் பின்யாஸ், 30, பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
பீதரை சேர்ந்த இவர், தற்போது பெங்களூரின் கோடிபாளையாவில் வசிக்கிறார். இவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவில் இருந்து போதைப்பொருள் கொண்டு வந்து, மங்களூரில் விற்பது விசாரணையில் தெரிந்தது.
இதற்கு முன் பிரஜ்வல் பின்யாஸ், மங்களூரின் பாதர் முல்லர்ஸ் கல்லுாரியில் மருத்துவ மாணவராக இருந்தார்.
அப்போதும் போதைப் பொருள் விற்றது உட்பட சில குற்றங்களில் தொடர்பு கொண்டார். இவர் மீது மூன்று போலீஸ் நிலையங்களில், வழக்கு பதிவானதும், விசாரணையில் தெரிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.