சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பு டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பு டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
UPDATED : அக் 25, 2026 12:00 AM
ADDED : அக் 24, 2026 09:54 PM
பெங்களூரு: அதிகமான தொகையை செலுத்தவில்லை என் கூறி, சிகிச்சையளிக்க தாமதம் செய்ததால், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், இளைஞர் உயிரிழந்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், புத்துாரு நகரில் வசித்தவர் ஷஹீன், 22. இவர் இரண்டு நாட்களுக்கு முன், திடீரென ரத்த வாந்தி எடுத்ததால், குடும்பத்தினர் பெங்களூரு நகரின், யஷ்வந்த்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, கூறினர். இதற்காக அதிக தொகையை முன்கூட்டியே செலுத்தும் படி கூறினர்.
ஷஹீனின் குடும்பத்தினர், இன்சூரன்ஸ் தொகைக்கு முயற்சித்தனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை. பணம் செலுத்தவில்லை என்பதால், மருத்துவமனை நிர்வாகத்தினர், நேற்று முன் தினம் மதியம் 3:00 மணிக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை, நான்கு மணி நேரம் தாமதமாக செய்தனர்.
அதன் பின் ஐ.சி.யூ.,வுக்கு அழைத்து சென்ற சில நிமிடங்களில், அவர் உயிரிழந்தார். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால், ஷஹீன் உயிர் பிழைத்திருப்பார். டாக்டர்களின் அலட்சியம் மற்றும் பணத்தாசையால் அவர் இறந்ததாக, குடும்பத்தினர் குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
