/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டு கொடுக்க கூடாது'
/
'ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டு கொடுக்க கூடாது'
ADDED : நவ 11, 2025 11:30 PM
ராம்நகர்: ''பிடதி டவுன்ஷிப்புக்காக, விவசாயிகள் ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டுக் கொடுக்கக் கூடாது,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடதியில், டவுன்ஷிப் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக பைரமங்களா, கஞ்சுகரனஹள்ளி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவசாயிகள், கேதகனஹள்ளியில் உள்ள மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்து மனுக் கொடுத்தனர்.
அப்போது, குமாரசாமி கூறியதாவது:
மாநில அரசு, விவசாயிகளுக்கு உதவுவதற்கு பதிலாக, ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு உதவுகிறது. டவுன்ஷிப் அமைக்கும் முடிவு, நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் எடுத்ததாக கூறுகின்றனர். அப்போது எடுத்த முடிவு வேறு, இப்போது எடுத்துள்ள முடிவுகள் வேறு.
பிடதியில் டவுன்ஷிப் என்ற பெயரில், விவசாயிகளின் வளமான நிலத்தை கொள்ளை அடிக்க இந்த அரசு துணிந்து வருகிறது.
விவசாயிகள் யாரும் ஒரு அங்குலம் நிலத்தை கூட கொடுக்கக் கூடாது. யாரும் பயப்பட வேண்டாம், உங்களுடன் நான் இருக்கிறேன்.
மாநிலத்தில் பல இடங்களில் வறண்ட நிலங்கள் உள்ளன. அங்கு டவுன்ஷிப் துவக்குவதை விடுத்து, இங்கு எதற்காக துவக்க ஆர்வம் காட்டுகிறீர்கள்? இப்பகுதி மக்களை காப்பாற்றுவது உங்கள் நோக்கமல்ல. உங்களை காப்பாற்றிக் கொள்ளவே இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள்.
விவசாயம் வளமாக இருக்கும் நிலத்தை கையகப்படுத்தி, விவசாயிகளுக்கு தொந்தரவு அளிக்காதீர்கள். விவசாயிகள், எந்த மிரட்டல்களுக்கும் பயப்படக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

