/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மானியத்திற்காக மட்டுமே படம் எடுக்காதீர்கள்! திரைப்பட துறையினருக்கு முதல்வர் அறிவுரை
/
மானியத்திற்காக மட்டுமே படம் எடுக்காதீர்கள்! திரைப்பட துறையினருக்கு முதல்வர் அறிவுரை
மானியத்திற்காக மட்டுமே படம் எடுக்காதீர்கள்! திரைப்பட துறையினருக்கு முதல்வர் அறிவுரை
மானியத்திற்காக மட்டுமே படம் எடுக்காதீர்கள்! திரைப்பட துறையினருக்கு முதல்வர் அறிவுரை
ADDED : நவ 04, 2025 04:51 AM

மைசூரு:  ''மானியத்திற்காக மட்டும் படம் எடுக்காதீர்கள். நல்ல படம் எடுத்து மானியம் பெறுங்கள்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் நேற்று 2018 - 19ம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து திரைப்பட துறையில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
அப்போது, சித்தராமையா பேசியதாவது:
சினிமா மிகவும் செல்வாக்குமிக்க ஊடகம். அது சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, திரைப்பட நட்சத்திரங்கள், திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் சமமான மதிப்புடன் வாழ வேண்டும். சமூகத்தை மாற்றும் படங்களை அதிகமாக எடுக்க வேண்டும்.
சினிமா நட்சத்திரங்கள், திரையில் தோன்றுவது போன்று, நிஜ வாழ்க்கையிலும் மதிப்புமிக்கவர்களாக நடந்து கொள்ள வேண்டும். நடிகர் ராஜ்குமார் திரையில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் அதே மதிப்பை கடைப்பிடித்தார்.
கன்னட திரைப்பட துறையின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு எங்கள் அரசு ஆதரவாக இருக்கும். மானியம் பெற மட்டும் படங்கள் தயாரிக்க வேண்டாம். நல்ல படங்களை, மக்கள் விரும்பும் மற்றும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை தயாரித்தால், மானியத்துக்கு மதிப்பு இருக்கும். நிலுவையில் உள்ள நடப்பாண்டுக்கான அனைத்து மானியங்களும் விரைவில் வழங்கப்படும்.
மைசூரில் சர்வதேச தரத்தில் திரைப்பட நகரம் அமைக்க, 160 ஏக்கர் நிலம், தகவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இரண்டு மாதங்களில் சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்த பின், திரைப்பட நகரின் கட்டுமான பணிகள் துவங்கும்.
முந்தைய அரசு செய்த தவறால், விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இனி அதுபோன்று நடக்காமல், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும்.
முன்னர் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பார்த்த படத்தையே மீண்டும் மீண்டும் பார்த்து வந்தோம். இப்போது பல படங்கள் வந்தாலும், அவற்றின் சமூக அக்கறையும், தரமும் குறைந்து வருகிறது. எனவே, படம் பார்ப்பதை குறைத்துக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

