எஸ்.ஐ.ஆரை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்! கர்நாடக பா.ஜ.,வினருக்கு நிதின் நபின் அறிவுரை
எஸ்.ஐ.ஆரை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்! கர்நாடக பா.ஜ.,வினருக்கு நிதின் நபின் அறிவுரை
ADDED : மே 24, 2026 11:30 PM

பெங்களூரு: ''எஸ்.ஐ.ஆரை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்; கோஷ்டி அரசியலை கைவிட்டு, அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுங்கள்,'' என, கர்நாடக பா.ஜ.,வினருக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் அறிவுரை வழங்கி உள்ளார்.
பா.ஜ., தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின், கர்நாடகாவுக்கு முதல் முறையாக நிதின் நபின் நேற்று முன்தினம் இரவு வந்தார். பெங்களூரில் தனியார் ஹோட்டலில் தங்கினார்.
பிளஸ் பாயின்ட் நேற்று காலை மல்லேஸ்வரத்தில் உள்ள காடு மல்லேஸ்வரா கோவிலில், சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின், முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டில் காலை உணவு சாப்பிட்டார்.
இதையடுத்து, மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், கர்நாடக பா.ஜ., தலைவர்கள், எம்.எல். ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எம்.எல்.ஏ.,க்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின், அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெறவே முடியாது என்று கூறினர். அங்கு, 200 இடங்களுக்கு மேல் அபார வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்து உள்ளோம். கர்நாடகாவிலும் நாம் ஆட்சியை பிடிக்க முடியும்.
எஸ்.ஐ.ஆர்., பணிகள் இங்கு நடக்கும் போது, அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். தேர்தல் போன்று நினைத்து செயல்படுங்கள். எஸ்.ஐ.ஆர்., பணிகள் சரியாக நடந்தால், நமது வெற்றி உறுதி.
காங்கிரஸ் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால் அடுத்த தேர்தலில் நம்மை ஆதரித்து விடுவர் என்று நினைக்காதீர்கள். அதுபோன்ற மாயை நமக்கு வேண்டாம். மக்கள் அதிருப்தியில் இருப்பது நமக்கு ஒரு பிளஸ் பாயின்ட் மட்டும் தான். களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள்.
மக்களை சந்தித்து குறைகளை கேளுங்கள். அனைவரும் ஒற்றுமையாக இருந்து அரசு செய்யும், தவறுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள். சட்டசபையில் மட்டும் போராடினால் போதாது. வெளியிலும் போராட்டம் நடத்துவது முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வலுவான செய்தி இதை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில், நிதின் நபின் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜயேந்திராவின் எதிரணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில் நிதின் நபின் பேசுகையில், ''கட்சிக்குள் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு வருவது இயல்பு தான். இதற்காக தனி அணியாக செயல்பட கூடாது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான், 2028 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும்,'' என்றார்.
மேலும், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவிடம், கட்சியில் அனைவருக்கும் பொறுப்பு கொடுங்கள்; அனைவரின் ஆதரவுடன் கட்சியை வலுப்படுத்தும் பணியை மேற்கொள்ளுங்கள் என்றும் கூறி உள்ளார்.
பின், ஜி.பி.ஏ., உள்ளாட்சி, 2028 தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து, தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன், சில முக்கிய தகவல்களையும் நிதின் நபின் வழங்கியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
