/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குனிகல் மக்கள் வாழ வேண்டாமா? பா.ஜ., மீது காங்., - எம்.எல்.ஏ., கோபம்
/
குனிகல் மக்கள் வாழ வேண்டாமா? பா.ஜ., மீது காங்., - எம்.எல்.ஏ., கோபம்
குனிகல் மக்கள் வாழ வேண்டாமா? பா.ஜ., மீது காங்., - எம்.எல்.ஏ., கோபம்
குனிகல் மக்கள் வாழ வேண்டாமா? பா.ஜ., மீது காங்., - எம்.எல்.ஏ., கோபம்
ADDED : ஜூன் 04, 2025 11:18 PM

துமகூரு: ''ஹேமாவதி அணை தண்ணீரை குனிகல்லுக்கு கொண்டு செல்ல எதிர்ப்புத் தெரிவிப்பதால், குனிகல் மக்கள் வாழ வேண்டாமா?'' என, பா.ஜ., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
குனிகல்லில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹேமாவதி தண்ணீரை குழாய்கள் மூலம் குப்பியில் இருந்து குனிகல்லுக்கு எடுத்துச் செல்வதால், துமகூரின் மற்ற தாலுகா மக்களுக்கு எந்த அநீதியும் ஏற்படாது.
மக்கள், விவசாயிகளை துமகூரின் பா.ஜ., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் தவறாக வழி நடத்துகின்றனர். தங்கள் அரசியல் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள இந்த திட்டத்தை சிலர் எதிர்க்கின்றனர்.
குனிகல்லும் துமகூரு மாவட்டத்தில் தான் உள்ளது. என் தொகுதி மக்களும் வாழ வேண்டாமா? துமகூரு தாலுகா விவசாயிகளிடம் நேரடியாக கேட்கிறேன்; எங்களுக்கு தண்ணீர் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் நேரடியாக சொல்லுங்கள்.
சிலரது பேச்சை கேட்டு தவறான பாதையில் செல்லாதீர்கள்.
குப்பியில் இருந்து வரும் தண்ணீர் குனிகல்லுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவர்களை நேரில் அழைத்துச் சென்று தெளிவுபடுத்துகிறேன்.
ஹேமாவதி அணையின் தண்ணீரை துமகூரு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு நினைக்கிறது. குனிகல்லுக்கு தண்ணீர் கொண்டு செல்ல என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
மிரட்டல்களுக்கு அல்ல; அன்பிற்கு தலைவணங்கும் நபர் நான். பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஜோதி கணேஷ், சுரேஷ் கவுடா, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா ஆகியோர் தான், தண்ணீரை கொண்டு செல்லும் விஷயத்தில் தொழில்நுட்ப கமிட்டி அமைக்க வேண்டும் என்றனர். இப்போது எதற்கு கமிட்டி அமைத்தனர் என்று கேட்கின்றனர்.
குனிகல்லுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் விஷயத்தில், துணை முதல்வர் சிவகுமார், துமகூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் பரமேஸ்வர் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.