கனகபுராவில் நிலம் வேண்டாம் பிடதியில் வேண்டுமா? மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு
கனகபுராவில் நிலம் வேண்டாம் பிடதியில் வேண்டுமா? மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு
ADDED : ஆக 19, 2026 03:25 AM

பெங்களூரு: ''கனகபுராவில் நிலங்களை விற்க வேண்டாம் என்று கூறிய தலைவர்கள், இப்போது பிடதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்,'' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
பிடதி டவுன்ஷிப் திட்டம் - நைஸ் சாலை சுங்க கட்டணத்துக்கு எதிராக பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று ம.ஜ.த., போராட்டம் நடத்தியது.
போராட்டத்தில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி பேசியதாவது:
பிடதி டவுன்ஷிப் மற்றும் நைஸ் விவகாரத்தில் அரசு ஆணவத்துடன் நடந்து கொள்கிறது. கனகபுராவில் நிலங்களை விற்க வேண்டாம் என்று கூறிய தலைவர்கள், இப்போது பிடதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர். இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்; என்னுடன் விவாதிக்க வாருங்கள். நான் பயந்து ஓடிவிட மாட்டேன்.
நைஸ் திட்டத்தில், நைஸ் நிறுவனம் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யவில்லை. விவசாயி களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இத்திட்டத்திற்கு, அரசு நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து நிதி வழங்கப்பட்டது.
தேவகவுடா, 2002 முதல் இத்திட்டத்துக்கு எதிராக போராடி வருகிறார். உங்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், நைஸ் நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி பேசுகையில், ''ரியல் எஸ்டேட் மாபியாவை உருவாக்குவதற்காக, அரசு நிலங்களை அபகரிக்கிறது. அவரின் மாவட்டத்தை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாகிவிட்டனர். ஆனால் அவர்களோ, மக்களின் குறைகளை கேட்பதில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, சிவகுமார் முதல்வராக இல்லை. முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல,'' என்றார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசுகையில், ''கடந்த, 25 ஆண்டுகளாக இந்த ஊழல் நடந்து வருகிறது. இதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும். அரசிடம் வளர்ச்சி பணிகளுக்கு பணம் இல்லை.
''எனவே, நீதிமன்ற உத்தரவை மீறி, நைஸ் சுங்க கட்டணம் என்ற பெயரில் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. வரும் நாட்களில் நைஸ் நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
