ரேணுகாசாமி கொலை வழக்கு 'அப்ரூவர்' மனு ஒத்திவைப்பு
ரேணுகாசாமி கொலை வழக்கு 'அப்ரூவர்' மனு ஒத்திவைப்பு
ADDED : ஆக 19, 2026 03:24 AM

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், 'அப்ரூவராக' மாற முயன்ற பிரதோஷின் மனுவை விசாரித்த, சிட்டி சிவில் நீதிமன்றம் அவரின் மனுவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரகவுடா உட்பட 17 பேர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவரான ஐ.டி., ஊழியரும், தொழிலதிபருமான பிரதோஷ் அப்ரூவராக மாற முடிவு செய்தார்.
அனுமதி அளிக்குமாறு, 59வது சிட்டி சிவில் கோர்ட்டில் மனு அளித்தார். ரேணுகாசாமியை தர்ஷன் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி கொலை செய்தார் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று நீதிபதி சுஜாதா முன் விசாரணைக்கு வந்தது. பிரதோஷ் நேரில் ஆஜரானார்.
நீதிபதி: அப்ரூவராக மாற யாராவது கட்டாயப்படுத்தினரா... மனுவில் கூறப்பட்டுள்ள சாரம்சங்களை படித்து புரிந்து கொண்டீர்களா; அப்ரூவராக மாறுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அறிந்து கொண்டீர்களா; உங்களுடைய வாக்குமூலம் வழக்கின் போக்கை மாற்றக்கூடும் என்பதை அறிந்துள்ளீர்களா...
பிரதோஷ்: அப்ரூவராக மாற என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. மனுவில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் நான் சுயநினைவோடு கூறியது. இதையடுத்து, இம்மனு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ரேணுகாசாமியின் தாய் ரத்னபிரபாவிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, அரசு தரப்பு வக்கீல் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
