ADDED : ஆக 19, 2026 03:22 AM

பெங்களூரு: கணவர், மகன் இறப்பு வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரின், சிக்க பானவாராவின் குட்டே பசவேஸ்வரா லே - அவுட்டில் வசித்தவர் அபிநந்தன், 35. எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.
இவரது மனைவி ஹரிணி, 26. தம்பதியின் மகன் யதுவீர், 5. இரண்டு நாட்களுக்கு முன், அபிநந்தனும், யதுவீரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இவர்கள் உறக்கத்திலேயே, இறந்ததாக ஹரிணி அக்கம், பக்கத்தினரிடம் கூறினார். தகவலறிந்து அங்கு வந்த போலீசாரிடமும் இதையே கூறினார். தந்தை, மகனின் உடல்களில் காயங்கள் இருந்ததால், ஹரிணியே கொலை செய்திருக்கலாம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். கணவரையும், மகனையும் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். ஹரிணிக்கு, வினய் என்பவருடன் முறை தவறிய தொடர்பு இருந்தது. இதற்கு முன், வீட்டை விட்டு ஓடினார். மூன்று மாதங்களுக்கு பின், வீடு திரும்பினார்.
குடும்பத்து பெரியவர்கள் அறிவுரை கூறினர். ஆனால் ஹரிணி, வினய் உடனான தொடர்பை விடவில்லை. கள்ளக்காதலருடன் வாழ விரும்பிய ஹரிணி, கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
சம்பவ நாளன்று இரவு 11:00 மணிக்கு அவர், வினயை வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பை துண்டித்தார். அதன் பின் இருவரும் சேர்ந்து, அபிநந்தனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர்.
அப்போது, சிறுவன் யதுவீர் பார்த்து விட்டார். அவரை விட்டு வைத்தால் வெளியே சொல்வார் என்ற பயத்தில், மகனை ஹரிணியே படுக்கையில் படுக்க வைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
அதன்பின் வினய் அங்கிருந்து சென்றுவிட்டார். ஹரிணி வீட்டில் இருந்த ரத்தக்கறைகளை கழுவினார். ரத்தம் தோய்ந்த கணவர் அபிநந்தனின் உடைகளை மாற்றினார்.
கறை படித்த உடைகளை அப்போதே துவைத்து போட்டது, விசாரணையில் தெரிந்தது. ஹரிணி, வினய் கைது செய்யப்பட்டனர்.
