டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் இன்று எட்டாம் ஆண்டு விழா
டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் இன்று எட்டாம் ஆண்டு விழா
ADDED : ஏப் 18, 2026 05:58 AM

சி.வி.ராமன் நகர்: டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் சார்பில், இன்று எட்டாம் ஆண்டு பொங்கல் விழா நடக்கிறது.
பெங்களூரு சி.வி.ராமன் நகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின், டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் சார்பில், பெங்களூரு சி.வி.ராமன் நகரில் உள்ள, 'சன்ஸ்கிருதி அரங்கில்' எட்டாம் ஆண்டு பொங்கல் விழா, இன்று காலை, 7:00 மணிக்கு நடக்கிறது.
கவுரவ விருந்தினர்களாக ஹைதராபாத் டி.ஆர்.டி.ஓ.,வின் உயர்தர அமைப்பு மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி சிவசுப்பிரமணியம், பெங்களூரு டி.ஆர்.டி.ஓ., எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடார் வளர்ச்சி நிறுவன இயக்குநர் விஞ்ஞானி ஷேக் அல்தாப், சென்னை தமிழ் பேராசிரியையும், பட்டிமன்ற பேச்சாளருமான பர்வீன் சுல்தானா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் பண்பாட்டை போற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள், அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவு நடக்கிறது. காலையில் கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டி, மாறுவேட போட்டி என, 10 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.
அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, 200 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதுதவிர, மாலை 4:00 முதல் 4:45 மணிக்குள், 'பம்பர் பரிசு குலுக்கலும்' நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோருக்கு, அதே இடத்தில் புளூடூத் இயர் பேட்ஸ், நெக் பேண்ட், போர்டபிள் ஸ்பீக்கர் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், புத்தக ஸ்டால்கள், அழகு சாதன பொருட்கள், வர்த்தகத்தில் முதலீடு, வீட்டில் செய்யப்பட்ட உணவு பொருட்கள், மின்சார கார் வாகனம், பாதுகாப்பு எலக்ட்ரானிக் பொருட்கள் ஸ்டால்கள் இடம் பெற உள்ளன.
விழா ஏற்பாடுகளை, விழா குழு தலைவர் ரகுபதி, செயலர்கள் சார்லஸ், ராஜேஷ் காந்தி, பிரதீபா, பொருளாளர் கார்த்திக் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
