/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆடை கட்டுப்பாடு: மாணவர்கள் எதிர்ப்பு
/
ஆடை கட்டுப்பாடு: மாணவர்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 24, 2025 05:31 AM
பெங்களூரு: மவுன்ட் கார்மல் கல்லுாரியில் விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாட்டுக்கு, சமூக வலைதளங்களில் கல்லுாரி மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு, வசந்த் நகரில் உள்ள மவுன்ட் கார்மல் கல்லுாரி, பிரபலமான தனியார் கல்லுாரிகளில் ஒன்றாகும். இந்த கல்லுாரியில் ஆயிரக்கணக்கிலான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த கல்லுாரியில் சமீபத்தில் மாணவ - மாணவியருக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மேலும், மாணவர்கள் சங்க தேர்தல்கள் நடத்துவதை தடை செய்வதாக கல்லுாரி நிர்வாகம் அறிவித்தது. இதை கேட்டு மாணவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
கல்லுாரி நிர்வாகத்தின் புதிய விதிகளை கண்டித்து, மாணவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு, 'கலெக்டிவ் பெங்களூரு' எனும் மாணவர் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் ஜியார்ஜ் லேகா கூறியதாவது:
எங்கள் கல்லுாரி நிர்வாகத்துக்கு, பிரத்யேக ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. மற்ற கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், ஆடை கட்டுப்பாடுகள் குறைவாகவே உள்ளன.
ஆடை கட்டுப்பாடு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர், எங்கள் கல்லுாரி மாணவர்களா என்பதில் சந்தேகம் உள்ளது.
மாணவர்கள்: பார்மல் சட்டை, பேன்ட், ஜீன்ஸ், காலர் வைத்த டி - ஷர்டுகள், பார்மல் ஷூ அணிந்து வரலாம். வட்ட, 'வி' வடிவ கழுத்து கொண்ட டி - ஷர்டுகள், பிரிண்டர்டு சட்டை, கிழிந்த ஜீன்ஸ் பேன்ட், கால்சட்டை, கார்கோ பேன்ட், செருப்பு அணிந்து வர அனுமதி கிடையாது.
மாணவியர்: சுடிதார், சல்வார் குர்தி, டாப்ஸ், பார்மல் சட்டை, பேன்ட், ஜீன்ஸ் அணிந்து வரலாம். கையில்லாத டாப்ஸ், வட்ட, 'வி' வடிவ கழுத்து கொண்ட டி - ஷர்டுகள், கிழிந்த ஜீன்ஸ் பேன்ட், கால்சட்டை, கார்கோ பேன்ட், செருப்பு அணிந்து வரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.