/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாஜி' எஸ்.பி.,யிடம் ரூ.97 லட்சம் கொள்ளையடித்து தப்பிய டிரைவர் கைது
/
'மாஜி' எஸ்.பி.,யிடம் ரூ.97 லட்சம் கொள்ளையடித்து தப்பிய டிரைவர் கைது
'மாஜி' எஸ்.பி.,யிடம் ரூ.97 லட்சம் கொள்ளையடித்து தப்பிய டிரைவர் கைது
'மாஜி' எஸ்.பி.,யிடம் ரூ.97 லட்சம் கொள்ளையடித்து தப்பிய டிரைவர் கைது
ADDED : ஆக 28, 2025 11:05 PM
சித்ரதுர்கா: சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று, 'மாஜி' போலீஸ் அதிகாரியிடம் திருடப்பட்ட 97 லட்சம் ரூபாயை, போலீசார் அதிரடியாக மீட்டனர்.
பெங்களூரை சேர்ந்தவர் குருபிரசாத், 67. சி.பி.ஐ.,யில் எஸ்.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான நிலம் பல்லாரியில் உள்ளது.
அந்த நிலத்தை விற்க முடிவு செய்தார். பல்லாரியில் வசிக்கும் தொழிலதிபரிடம் பேசி 97 லட்சம் ரூபாய்க்கு, நிலம் விற்க 'டீல்' பேசப்பட்டது.
கடந்த 26ம் தேதி இரவு பெங்களூரில் இருந்து வாடகை காரில் குருபிரசாத்தும், அவரது மனைவி லலிதாவும் பல்லாரிக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் காலையில் நிலத்தை விற்றுவிட்டு, அதற்கான 97 லட்சம் ரூபாயுடன் பெங்களூரு வந்து கொண்டிருந்தனர். சித்ரதுர்காவின் செல்லகெரே பகுதியில் வந்தபோது, உணவு சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினர்.
காருக்குள் பணத்தை வைத்துவிட்டு ஹோட்டலில் குருபிரசாத்தும், லலிதாவும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். கார் டிரைவர் ரமேஷுக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர்.
அவசர, அவசரமாக சாப்பிட்ட ரமேஷ், ஹோட்டலில் இருந்து வெளியே சென்றார். காரின் முன் சிறிது நேரம் நின்றவர் திடீரென காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து புறப்பட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குருபிரசாத், செல்லகெரே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். வாடகை காரின் நம்பரையும் கூறினார்.
காரை, போலீஸ் ஜீப்பில் டி.எஸ்.பி., ராஜண்ணா, இன்ஸ்பெக்டர் குமார், எஸ்.ஐ., யரேஷ் தலைமையிலான, போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசார் பின்தொடர்ந்து வருவதை அறிந்த, வாடகை கார் டிரைவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.
துமகூரின் பாவகடா பகுதியில் சென்றபோது, ரமேஷ் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி நின்றது. அவர் கைது செய்யப்பட்டார். காரில் இருந்த 97 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. திருடிய பணத்துடன் தன் சொந்த ஊரான ஆந்திராவின் ஹிந்துப்பூருக்கு, தப்பிச் செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட, 97 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி குரு பிரசாத்திடம் போலீசார் கேட்டுள்ளனர். தவிர, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதியும் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.