/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் டாக்சிகளுக்கு தடை வேண்டாம் அமைச்சரிடம் ஓட்டுநர்கள் முறையீடு
/
பைக் டாக்சிகளுக்கு தடை வேண்டாம் அமைச்சரிடம் ஓட்டுநர்கள் முறையீடு
பைக் டாக்சிகளுக்கு தடை வேண்டாம் அமைச்சரிடம் ஓட்டுநர்கள் முறையீடு
பைக் டாக்சிகளுக்கு தடை வேண்டாம் அமைச்சரிடம் ஓட்டுநர்கள் முறையீடு
ADDED : மே 19, 2025 11:21 PM
பெங்களூரு: பெங்களூரில் ரேபிடோ, ஊபர் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கும்படி, ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். 'ரத்து செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது' என, பைக் ஒட்டுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பெங்களூரில் சமீப நாட்களாக, பைக் டாக்சி பிரபலமடைந்துள்ளது. ஊபர், ரேபிடோ நிறுவனங்கள் பைக் டாக்சிக்களை இயக்குகின்றன. போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, வரப்பிரசாதமாக உள்ளது.
புக்கிங்
ஆட்டோ ஓட்டுநர்கள், அழைத்த இடத்துக்கு வருவதில்லை; மீட்டர் போடாமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, பலரும் பைக் டாக்சியை பயன்படுத்த, ஆர்வம் காட்டுகின்றனர். அவசர நிகழ்ச்சி, அலுவலகம் உட்பட மற்ற இடங்களுக்கு செல்ல பைக் டாக்சியை 'புக்' செய்து கொண்டு பயணிக்கின்றனர்.
ஆனால் பைக் டாக்சிகளால் தங்களின் வருவாய் பாதிக்கிறது. இதற்கு தடை விதிக்கும்படி போக்குவரத்து துறைக்கு ஆட்டோ சங்கத்தினர் நெருக்கடி கொடுக்கின்றனர்.
பைக்குகளை பொதுமக்களின் போக்குவரத்து வாகனமாக பதிவு செய்து கொள்ள மாநில அரசுக்கு உத்தரவிடும்படி கோரி, ஊபர் இந்தியா சிஸ்டம்ஸ் உட்பட, சில நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆறு வாரங்கள் பைக் டாக்சிக்களை நிறுத்தும்படி உத்தரவிட்டது.
தற்காலிகம்
இதை எதிர்த்து ஓலா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கப்பட்டது. பைக் டாக்சிகள் தொடர்ந்து இயங்குகின்றன.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கும்படி, ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள் போக்கு வரத்து துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். எனவே பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்க அரசும் ஆலோசிக்கிறது. இந்த தொழிலை நம்பி வாழும் பைக் டாக்சி ஓட்டுநர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நுாற்றுக்கணக்கான பைக் டாக்சி ஓட்டுநர்கள், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியை சந்தித்து பேசினர். 'எந்த காரணத்தை கொண்டும், பைக் டாக்சிகளை ரத்து செய்ய கூடாது. வேறு மாநிலங்களில் ரேபிடோ பைக் டாக்சி இயக்க அனுமதி உள்ளது.
நமது மாநிலத்திலும் அனுமதி தாருங்கள். பைக் டாக்சியை நம்பி, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்களின் வயிற்றில் அடிக்க கூடாது. ஒருவேளை பைக் டாக்சிகளை ரத்து செய்தால், போராட்டம் நடத்துவோம்' என, எச்சரித்துஉள்ளனர்.
'ஆட்டோ, டாக்சிகளில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்களுக்கு பைக் டாக்சி மிகவும் உதவியாக உள்ளது. ஆட்டோவில் ஒருவர் பயணம் செய்தாலும், 100 முதல், 200 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
'ஆனால் பைக் டாக்சியில் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்' என, அவர்கள் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.