ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் 'குட்கா' மென்றால் அபராதம்
ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் 'குட்கா' மென்றால் அபராதம்
ADDED : ஆக 20, 2026 11:48 PM
பெங்களூரு: ' பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில், பான் மசாலா, குட்காவை மென்று உமிழ்ந்தால், பயணியர் மட்டுமின்றி, பஸ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்' என, என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., எனும் வடமேற்கு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் பிரியங்கா கூறியதாவது:
பொது இடங்களில், துாய்மையை கடைபிடிக்க வேண்டும். இதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்க, என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது. இதுவரை பஸ் நிலையங்களை அசுத்தமாக்கும் பயணியர் மற்றும் பொது மக்களுக்கு மட்டுமே, போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆனால், போக்குவரத்துக்கழக பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் குட்கா, பான் மசாலாவை மென்று, பஸ் நிலையங்கள், பஸ்களின் பல இடங்களில் உமிழ்ந்து, அசுத்தமாக்குகின்றனர்.
இது குறித்து, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்துள்ளது. துாய்மை விஷயத்தில் ஊழியர்களுக்கு விதி விலக்கு இல்லை. பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியில் இருக்கும் போதோ அல்லது பஸ் நிலைய வளாகத்தில் உமிழ்ந்தாலோ, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பயணியருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அபராதம் செலுத்திய பிறகும், அதே தவறை செய்யும் ஊழியர்களுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி துறை ரீதியில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையை, கடுமையாக செயல்படுத்தும்படி, போக்குவரத்து கழகத்தின் பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள், பஸ் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கும் அதிகாரம் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தின் சொத்துகள், பஸ் நிலையங்களில் துாய்மையை காப்பாற்றுவது, அனைவரின் கடமையாகும். இனியாவது பஸ் நிலையங்கள், பஸ்களில் குட்கா, பான் மசாலாவின் சிவப்பு கரை இல்லாமல், சுத்தமாக இருக்கும் என, நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
