வறட்சியால் பாதிப்பு தாலுகாக்கள் 2வது பட்டியல் விரைவில் அறிவிப்பு
வறட்சியால் பாதிப்பு தாலுகாக்கள் 2வது பட்டியல் விரைவில் அறிவிப்பு
ADDED : செப் 02, 2026 12:53 AM

கதக்: ''வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாக்களின், 2வது பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
கதக் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதல்வர் சிவகுமார் நேற்று ஆய்வு செய்தார். விவசாயிகளுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின், வறட்சி நிலவரம் தொடர்பாக கதக் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் வசிக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்னை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
ஆலோசனைக்கு பின், சிவகுமார் அளித்த பேட்டி:
கதக் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி, அனைத்து தாலுகாக்களும் நேரில் சென்று உண்மை நிலவரம் குறித்து அறிக்கை அளித்தார். அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிப்போம்.
கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கதக் மாவட்டம் மோசமான வறட்சியை சந்தித்து உள்ளது. பல இடங்களில் விதைப்பு பணிகள் நடக்கவில்லை.
விவசாய நிலத்திற்கு சென்று பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம், சூரியகாந்தி பயிர்களை பார்த்தேன். விவசாயிகள் சந்திக்கும் இன்னல்களை நேரில் பார்த்தேன். அவர்களுடன் கலந்துரையாடி, ஆறுதல் கூறியதுடன், ஜி ராம் ஜி திட்டம் எப்படி உதவும் என்றும் அவர்களிடம் எடுத்து கூறினேன்.
வறட்சி பாதித்த தாலுகாக்கள் குறித்து, முதல்கட்டமாக வெளியிட்ட பட்டியலில் இம்மாவட்டத்தில் உள்ள கஜேந்திரகடா தாலுகா மட்டும் உள்ளது. அனைத்து தாலுகாக்களையும் வறட்சி பகுதியாக அறிவிக்க எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு அனுப்பும் அறிக்கையும், மத்திய அரசின் அறிக்கையும் ஒத்துபோக வேண்டும். டில்லியில் இருந்து வறட்சி பாதிப்பை ஆய்வு செய்ய குழு வர வேண்டும். அப்போது தான் மத்திய அரசு உதவி செய்யும். நாங்கள் எங்களால் முயன்ற அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாக்களின் இரண்டாவது பட்டியல் விரைவில் வெளியிடப்படும். மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், மக்கள் சேவை துறை வரும் 5ம் தேதி முதல் செயல்பட துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
