/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் ரூ.10 கோடி போதை பொருட்கள்... பறிமுதல்!: இரண்டு நைஜீரியர்கள் உட்பட ஏழு பேர் கைது
/
பெங்களூரில் ரூ.10 கோடி போதை பொருட்கள்... பறிமுதல்!: இரண்டு நைஜீரியர்கள் உட்பட ஏழு பேர் கைது
பெங்களூரில் ரூ.10 கோடி போதை பொருட்கள்... பறிமுதல்!: இரண்டு நைஜீரியர்கள் உட்பட ஏழு பேர் கைது
பெங்களூரில் ரூ.10 கோடி போதை பொருட்கள்... பறிமுதல்!: இரண்டு நைஜீரியர்கள் உட்பட ஏழு பேர் கைது
ADDED : செப் 30, 2025 05:35 AM

பெங்களூரு: வெளிநாட்டில் இருந்து, தபால் அலுவலகத்துக்கு பார்சலில் வந்த, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா உட்பட, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இரண்டு நைஜீரியர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசாரின் கடுமையான நடவடிக்கைக்கு பின்னரும், பெங்களூரில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் வரவில்லை. ஆங்காங்கே கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்களை குறி வைத்து, போதைப் பொருள் விற்பனை நடப்பதை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். நைஜீரியர்கள் உட்பட பலரை கைது செய்கின்றனர். கிலோ கணக்கில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
சமீப நாட்களாக வெளிநாடுகளில் இருந்து, பார்சல் மற்றும் கூரியரில் போதைப் பொருட்கள் வருவதை, போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் அளித்த பேட்டி:
கே.ஜி.நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தபால் அலுவலகத்துக்கு, வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒரு பார்சல், சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இது குறித்து, தபால் அலுவலக ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், பார்சலை பிரித்து பார்த்த போது, ஹைட்ரோ கஞ்சா இருப்பது தெரிந்தது. 1.22 கிலோ ஹைட்ரோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு, 1 கோடி ரூபாயாகும்.
முதலில் கே.ஜி.நகர் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவானது. அதன்பின் சி.சி.பி., பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணை நடத்துகின்றனர். வெளிநாட்டில் இருந்து போதைப் பொருளை, யார் அனுப்பினர், யாருக்காக அனுப்பப்பட்டது என்பது, விசாரணைக்கு பின் தெரியும்.
பெங்களூரின், ஹெப்பகோடியில் வீடு ஒன்றில், போதைப்பொருள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை அங்கு சென்று சோதனையிட்ட சி.சி.பி., போலீசார், போதை மாத்திரைகள் உட்பட, 7.80 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். நைஜீரியாவை சேர்ந்த கெவின் ரோஜர், 38, தாமஸ் நவீத், 37, ஆகியோரை கைது செய்தனர்.
கடந்த 2019ல், மெடிக்கல் விசா மற்றும் மாணவர் விசாவில் இந்தியாவுக்கு வந்த இவர்கள், டில்லியில் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் வரவழைத்து, பெங்களூருக்கு கொண்டு வந்து கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்களை குறி வைத்து விற்பனை செய்துள்ளனர்.
மேலும், கேரளாவில் இருந்து, குறைந்த விலைக்கு ஹைட்ரோ கஞ்சா வாங்கி வந்து, பெங்களூரில் விற்று வந்த மென்பொறியாளர் ஒருவரை, சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா, ஒரு கார், பைக், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த, அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், குறைந்த விலைக்கு ஹைட்ரோ கஞ்சா வாங்கி வந்து, அதிக விலைக்கு விற்ற பல் மருத்துவ கல்லுாரி மாணவரையும், சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப் பொருள் விற்ற மூவரை கைது செய்து விசாரித்த போது, பல் மருத்துவ கல்லுாரி மாணவருக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது. இம்மூவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இவர் சிக்கினார்.
மூவரிடமும் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் மீட்கப்பட்டது. மொத்தம், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்து, ஏழு பேரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.