ரூ.5.14 கோடி போதை பறிமுதல்: நைஜீரியர் உட்பட 11 பேர் கைது
ரூ.5.14 கோடி போதை பறிமுதல்: நைஜீரியர் உட்பட 11 பேர் கைது
ADDED : ஏப் 01, 2026 04:07 AM

பெங்களூரு: பெங்களூரில் ஆறு இடங்களில் 5.14 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்த போலீசார், நைஜீரியர் உட்பட 11 பேரை கைது செய்து உள்ளனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு எலஹங்கா அருகே இஸ்ரோ லே - அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் போதை பொருள் விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 'மெத்தாம் பெட்டமைன்' சிக்கியது.
அந்த வீட்டில் வசித்த மேற்கு ஆப்பிரிக்கா நாட்டின் நைஜீரியாவை சேர்ந்த சாமுவேல் இகேனா, 44 கைது செய்யப்பட்டார். கடந்த 2012 ல் வணிக விசாவில் இந்தியா வந்த அவர், விசா காலம் முடிந்தும், சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லாமல், பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்து போதை விற்பனையில் ஈடுபட்டு உள்ளார்.
பாரதிநகர், ஆடுகோடி, ஜாலஹள்ளி, புலிகேசிநகர் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா, எம்.டி.எம்.ஏ., உள்ளிட்ட போதை பொருள் விற்ற பத்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 31 கிலோ கஞ்சா, 220 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 162 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 6 வழக்குகளில் 5.14 கோடி ரூபாய் போதை பொருட்கள் சிக்கி உள்ளன. கைதானவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது. கைதான நைஜீரியரை அவரது நாட்டிற்கு கடத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
