மது அருந்தி விட்டு பள்ளி வாகனம் ஓட்டுவது பெங்களூரில் அதிகரிப்பு
மது அருந்தி விட்டு பள்ளி வாகனம் ஓட்டுவது பெங்களூரில் அதிகரிப்பு
ADDED : மே 25, 2026 10:26 PM
பெங்களூரு: 'பெங்களூரில் பள்ளி வாகன ஓட்டுநர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது அதிகரிக்கிறது. எனவே, பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, போக்குவரத்து பிரிவு இணை போலீஸ் கமிஷனர் கார்த்திக் ரெட்டி கூறியதாவது:
பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவது அதிகரிப்பது, போலீசாரின் சோதனையில் தெரிய வந்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டி, போலீசாரிடம் சிக்குவோரில் பலரும், பள்ளி வாகன ஓட்டுநர்களாவர். நடப்பாண்டில் இதுவரை, 83 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு, 12 ஆக இருந்த வழக்குகள், 2024ம் ஆண்டு 124 ஆக அதிகரித்தன. 2025ல் இந்த எண்ணிக்கை 111 ஆக குறைந்தது. ஆனால் 2026 மே வரையில், 83 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, ஆண்டு முடிவிற்குள், அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெற்றோர் இந்த விஷயத்தில், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பள்ளி நிர்வாகத்தினரை எச்சரிக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தினரும், போலீசார் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற வேண்டும். தங்களின் ஓட்டுநர் கனரக வாகனம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளாரா, வாகனம் ஓட்டுவதில் ஐந்து ஆண்டு அனுபவம் உள்ளவரா என்பதை, பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அவர் மீது கிரிமினல் வழக்கோ, சாலை விபத்துகள் ஏற்படுத்திய வழக்கோ இருக்க கூடாது. பள்ளி வாகனங்களில் தேவையான பாதுகாப்பு சாதனங்கள் இருப்பது கட்டாயம்.
முதலுதவி சிகிச்சை பெட்டி, பாதுகாப்பான கிரில்கள், அவரச கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள், ஜி.பி.எஸ்., டிராக்கிங் வசதி, கதவு லாக்கிங் வசதி, போதுமான இருக்கை வசதிகள் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
