/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போன் செய்து போலீசாரை அலைக்கழித்த குடிகாரர்
/
போன் செய்து போலீசாரை அலைக்கழித்த குடிகாரர்
ADDED : மார் 22, 2025 05:28 AM

சிக்கமகளூரு : சிருங்கேரியில் குடிகாரர் ஒருவர், பஸ் நிலையத்தில் சண்டை நடப்பதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் போன் செய்து அலைக்கழித்தார்.
சண்டை
சிக்கமகளூரு, சிருங்கேரி போலீசாருக்கு, நேற்று முன் தினம் நள்ளிரவில் ஒருவர் போன் செய்தார். அவர், 'சிருங்கேரி பஸ் நிலையத்தில் சண்டை நடக்கிறது.
'இச்சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக வாருங்கள்' என அழைப்பு விடுத்தார்.
அதே போன்று, ஆம்புலன்சுக்கும் போன் செய்து, 'காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாருங்கள்' என, கூறி தொடர்பை துண்டித்தார்.
இதை உண்மை என நினைத்த போலீசார், பஸ் நிலையத்துக்கு விரைந்தனர். ஆம்புலன்சும், 40 கி.மீ., தொலைவில் இருந்து வந்தது.
ஆனால், பஸ் நிலையத்தில் எந்த தகறாரோ, சண்டையோ நடக்கவில்லை. விசாரித்த போது குடிகாரர் ஒருவர் பொய்யான தகவல் கொடுத்தது தெரிந்தது.
சவால்
சண்டை என கூறிய நபரின் மொபைல் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்ட போது, அவர், 'பூமி மீதும், ஆகாயத்தின் கீழேயும் இருக்கிறேன்.
'தைரியம் இருந்தால் என்னை பிடியுங்கள்' என சவால் விடுத்தார். அதன்பின் போலீசார், இரவு முழுதும் தேடி, மொபைல் எண் லொகேஷனை வைத்து, பசவராஜை கண்டுபிடித்தனர்.
அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில், அந்நபர் ஹகரி பொம்மனஹள்ளியை சேர்ந்த பசவராஜ் என்பதும், கூலி வேலைக்காக சிருங்கேரி வந்திருந்ததும், மூக்கு முட்ட குடித்த அவர், போலீஸ் நிலையத்துக்கும், ஆம்புலன்சுக்கும் பொய்யான தகவல் கொடுத்து வரவழைத்ததும் தெரியவந்தது.
சிறிது நேரம் அங்கு வைத்திருந்து, அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.