/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்காவுக்கு செல்லும் தசரா யானைகள்
/
தர்காவுக்கு செல்லும் தசரா யானைகள்
ADDED : செப் 27, 2025 11:10 PM
ஜம்பு சவாரியில் பங்கேற்கும் தசரா யானைகள், ஜம்பு சவாரிக்கு முந்தைய நாள், தர்காவுக்கு சென்று பூஜை செய்கின்றன. இதன் பின்னணியில், ஒரு கதை உள்ளது.
மைசூரில் நடக்கும் தசரா திருவிழா, நுாற்றாண்டுகள் பாரம்பரியமிக்கது. இதை பார்க்க உலகின் பல நாடுகளில் இருந்தும், லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். தசரா நிகழ்ச்சிகளில் ஜம்பு சவாரி மிகவும் முக்கியமான நிகழ்வாகும். சாமுண்டீஸ்வரி தேவியின் சிலையுடன், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி யானை கம்பீரமாக நடைபோடும்.
அதன் அக்கம், பக்கத்தில் யானைகள் அணிவகுத்துச் செல்வது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கலைக்குழுக்கள், ஊர்திகள் பின் தொடரும். இதற்காக பல்வேறு முகாம்களில் இருந்து, யானைகள் தசராவுக்கு இரண்டு மாதங்கள் முன்பே, மைசூருக்கு வந்து ஜம்பு சவாரிக்கு தயாராகின்றன.
ஆண்டுதோறும், ஜம்பு சவாரிக்கு முந்தைய நாள், தசரா தர்காவுக்கு செல்லும் சம்பிரதாயம் உள்ளது. இதற்கான காரணம் என்ன? இதில் ஏதாவது சிறப்பு உள்ளதா என்ற கேள்வி எழுவது சகஜம். இதன் பின்னணியில், ஒரு சுவாரசியான கதை உள்ளது.
கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு, மஹாராஜா நால்வடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சிக் காலத்தில், ஜம்பு சவாரிக்காக வனத்தில் இருந்து, யானைகள் மைசூருக்கு அழைத்து வரப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு யானைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. யானையை மைசூரின், சாம்ராஜ மொஹல்லாவில் உள்ள ஹஜரத் ஷாவலீ தர்காவுக்கு அழைத்துச் சென்று, பூஜை செய்து, தாயத்துக் கட்டி உள்ளனர். சிறிது நேரத்தில் யானை குணமடைந்துள்ளது.
அதன்பின் ஆண்டுதோறும், ஜம்பு சவாரிக்கு முந்தைய தினம், ஹஜரத் ஷாவலீ தர்காவுக்கு யானைகளை அழைத்து வந்து, பிரார்த்தனை செய்து ஆசிர்வாதம் பெறும் சம்பிரதாயம் துவங்கியது. இது போன்று ஆசி பெறுவதால், யானைகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.
தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது, நம்பிக்கையாகும். இது மத நல்லிணக்கத்துக்கு, எடுத்துக்காட்டாக உள்ளது.