காங்., - எம்.எல்.ஏ., ஹாரிஸ் வீட்டில் ஈ.டி., நடத்திய சோதனை 21 மணி நேரம்!: கணக்கில் வராத ரூ.37 லட்சம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
காங்., - எம்.எல்.ஏ., ஹாரிஸ் வீட்டில் ஈ.டி., நடத்திய சோதனை 21 மணி நேரம்!: கணக்கில் வராத ரூ.37 லட்சம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
ADDED : ஏப் 22, 2026 01:43 AM

பெங்களூரு ஜெயநகரில் வசிப்பவர் ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி, 35; சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், தனியார் நிறுவனங்களின் இணையதளங்களை முடக்கி, நிறுவனங்களுக்கு சொந்தமான பிட்காயின்களை விற்று, அதில் கிடைத்த பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி, ஆடம்பரமாக செலவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிந்ததால், அமலாக்கத்துறையும் விசாரித்தது.
பெங்களூரு சாந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் மகன்கள் முகமது நலபட், ஓமர் நலபட் ஆகியோருக்கும், ஸ்ரீகிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதையும், முகமது நலபட் வங்கிக் கணக்கிற்கு, ஸ்ரீகிருஷ்ணா தரப்பில் இருந்து 10 லட்சம் ரூபாய் வந்ததற்கான ஆதாரங்களையும், அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
உணவு, தண்ணீர் இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு, அசோக் நகரில் உள்ள ஹாரிஸ், முகமது நலபட் வீடுகள், அலுவலகங்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுமான் கான் பேரன் ஹக்கீப் கான் வீடு என 12 இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நேற்று முன்தினம் இரவு வரை சோதனை நடந்தது.
இரவே சோதனை முடிந்தது என்று கூறப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை 3:30 மணி வரை, 21 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடந்தது தெரியவந்து உள்ளது.
மதியம், இரவு உணவு சாப்பிடக் கூட ஹோட்டலுக்கு செல்லாமல், சோதனை நடந்த இடங்களுக்கே உணவு, தண்ணீரை அதிகாரிகள் வரவழைத்து உள்ளனர்.
12 இடங்களிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி இருக்கின்றனர். சோதனையின் போது ஹாரிஸ் வீட்டில் இருந்து, கணக்கில் வராத 37 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தகவல் வெளியானது.
'ஹெலிபேட்' இது குறித்து, முகமது நலபட் கூறியதாவது:
எங்கள் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கும், எனது அப்பா ஹாரிசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது வீட்டில் நானும், ஓமரும் வசிப்பதால் சோதனை நடந்தது.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் வீட்டில் இருந்து 37 லட்சம் ரூபாயை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
அப்படி எடுத்ததாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் உங்களிடம் கூறினரா. எங்கள் வீட்டின் மேல் ஹெலிபே ட் இருப்பதாகவும் செய்தி வெளியிடுகிறீர்கள். அது எங்கு உள்ளது என்று, எனக்கும் காட்டுங்கள். இங்கிருந்து ஒரு ரூபாய் கூட அதிகாரிகள் எடுத்து செல்லவில்லை. எங்களது மொபைல் போன்களை வாங்கி சென்றுள்ளனர்.
முடக்க சதி ஸ்ரீகிருஷ்ணாவை எனக்கு தெரியாது என்று நான் சொல்லவில்லை. நான் அரசியலில் இருக்கிறேன். என்னுடன் பலர் தொடர்பில் இருக்கின்றனர். அதுபோன்று தான் ஸ்ரீகிருஷ்ணாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பார்த்து எனது 89 வயது தாத்தாவும், அம்மாவும் பயப்படுகின்றனர். அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது.
என் பெற்றோருக்கு நான் எப்போதும் நல்ல மகனாக இருந்தது இல்லை. என்னால், அவர்களுக்கு ஏதாவது பிரச்னை வந்து கொண்டே இருக்கிறது. எங்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவான வழக்கு. ஆறு ஆண்டுகள் கழித்து வந்து ஏன் சோதனை நடத்துகின்றனர் என்று தெரியவில்லை.
அரசியல் ரீதியாக எனது அப்பாவை முடக்க சதி நடக்கிறது. அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க கூடாது என்பதற்காக, பா.ஜ., செய்யும் சதி இது. இதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக தேர்தலுக்கு பணம்?
ஹாரிஸ் எம்.எல்.ஏ., மட்டும் இல்லை; தொழிலதிபரும் ஆவார். அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் துபாயில் உள்ளன. இந்நிறுவனங்கள் மூலம் கிடைத்த ஹவாலா பணத்தை, சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழகம், கேரளாவுக்கு, ஹாரிஸ் அனுப்பி வைத்தததாகவும், இதுதொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் அவரது வீட்டில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுபற்றி அமலாக்கத்துறையிடம் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை.
முஸ்லிம் தலைவர்கள் ஆறுதல்
எம்.எல்.ஏ., ஹாரிஸ் வீட்டிற்கு, அமைச்சர் ஜமீர் அகமது கான், எம்.எல்.சி., நசீர் அகமது உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேற்று காலையில் இருந்தே வந்தனர். ஹாரிஸுக்கு ஆறுதல் கூறியதுடன், எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்றும் தைரியம் கூறி சென்றனர்.
இடைக்கால அறிக்கை
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''பிட்காயின் மோசடி வழக்கில், எஸ்.ஐ.டி., விசாரணை தாமதம் ஆகி உள்ளது. விசாரணையை விரைந்து முடிக்க முதல்வர் பரிந்துரைத்து உள்ளார். விசாரணை குழுவிடம் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. என்ன நிலையில் விசாரணை செல்கிறது என்று இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறி உள்ளேன். எஸ்.ஐ.டி.,யிடம் இருந்து கிடைத்த தகவல் அடிப்படையில், ஹாரிஸ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருக்கலாம். இதுகுறித்து அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்றார்.
காங்., தலைவர்கள் குறி
முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் மட்டுமே, மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்துகின்றன. அவர்கள் எங்களை மட்டுமே குறி வைக்கின்றனர். பா.ஜ., தலைவர்கள் வீடுகளில் ஏன் சோதனை நடப்பது இல்லை?'' என்றார்.
