/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீரேந்திர பப்பியிடம் ரூ.2,000 கோடி சொத்து ஈ.டி., தகவல்
/
வீரேந்திர பப்பியிடம் ரூ.2,000 கோடி சொத்து ஈ.டி., தகவல்
வீரேந்திர பப்பியிடம் ரூ.2,000 கோடி சொத்து ஈ.டி., தகவல்
வீரேந்திர பப்பியிடம் ரூ.2,000 கோடி சொத்து ஈ.டி., தகவல்
ADDED : செப் 05, 2025 04:52 AM

பெங்களூரு:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி உள்ள, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி குறுகிய காலத்தில் 2,000 கோடி ரூபாய் சம்பாதித்ததாக, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
அவரது காவல் மேலும் நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி. கோவாவில் சூதாட்ட விடுதிகள் நடத்துகிறார். அங்கு சட்டவிரோதமாக 'பெட்டிங்' நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில், கடந்த மாதம் 23ம் தேதி வீரேந்திர பப்பியை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது வீட்டில் இருந்து 18 கோடி ரூபாய் ரொக்கம்; ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டன.
முதல்முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஐந்து நாட்களும், இரண்டு முறை ஆஜர்படுத்தப்பட்டபோது ஆறு நாட்களும் வீரேந்திர பப்பியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
நேற்றுடன் அவரது காவல் நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமலாக்கத்துறை வக்கீல் பிரமோத் சந்திரா வாதிடுகையில், ''வீரேந்திர பப்பி விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. நாங்கள் சேகரித்து உள்ள டிஜிட்டல் ஆதாரங்கள், சூதாட்டம் மூலம் கிடைத்த பணம் குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது.
குறுகிய காலத்தில் 2,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதற்கான ஆதாயம் குறித்து விசாரிக்க வேண்டும். இதனால் அவரை எங்கள் கஸ்டடியில், மேலும் 15 நாட்கள் அனுப்ப வேண்டும்,'' என்றார்.
வீரேந்திர பப்பி வக்கீல் கிரண் ஜவளி வாதிடுகையில், ''என் மனுதாரர் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார்.
''இதுபோன்ற சூழ்நிலையில் அவரை மீண்டும், மீண்டும் அமலாக்கத்துறை தங்கள் காவலுக்கு கேட்பது சரியல்ல. அவரை சிறையில் அடைக்க வேண்டும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வீரேந்திர பப்பியை மேலும் நான்கு நாட்கள், அமலாக்கத்துறை கஸ்டடிக்கு அனுப்பி உத்தரவிட்டார்.