ADDED : ஏப் 25, 2025 05:41 AM
குடகு: விராஜ்பேட்டின், எம்மேஹுன்டி எஸ்டேட்டில் காட்டு யானை தாக்கியதில், காப்பி தோட்டத்தின் முன்னாள் சூப்பர்வைசர் உயிரிழந்தார்.
குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின், பாலிபெட்டா கிராமத்தில் வசித்தவர் செல்லா, 65. இவர் காபி தோட்டத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவர் தினமும் காலை, கிராமத்தின் அருகில் உள்ள எம்மேஹுன்டி எஸ்டேட்டில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
அதேபோன்று, நேற்று அதிகாலை 6:30 மணியளவில், எஸ்டேட்டில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிரே வந்த காட்டு யானை, செல்லாவை தாக்கியது. அவரால் தப்பியோட முடியவில்லை.
யானையின் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்தில் உயிரிழந்தார்.
அவரை தாக்கி கொன்ற காட்டு யானை, எஸ்டேட்டில் புகுந்தது. தகவலறிந்து அங்கு வந்த விராஜ்பேட் போலீசார், செல்லா உடலை மீட்டனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். எஸ்டேட்டில் உள்ள யானையை தேடி வருகின்றனர்.
இப்பகுதியில் காட்டு யானைகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. தொழிலாளர்கள் காபி தோட்டம், எஸ்டேட்களுக்கு பணிக்கு வரவே அஞ்சுகின்றனர். 'காட்டு யானை எந்த திசையில் இருந்து வரும் என்பதே தெரியாது. பயத்துடன் நடமாட வேண்டியுள்ளது. காட்டு யானைகளின் தொல்லைக்கு தீர்வே இல்லையா' என, கிராமத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.