ADDED : ஏப் 07, 2026 05:33 AM
உடுப்பி: கிணற்றில் விழுந்து அபாயத்தில் இருந்த முதியவர் உயிர் பிழைக்க, காஸ் சிலிண்டர் காரணமாக இருந்தது.
உடுப்பி கம்ப்ளகட்டா கிராமத்தில் வசிப்பவர் சீனிவாஸ் ஆச்சார்யா, 62. தனியாக வசிக்கிறார். சமீபத்தில் உடல் நிலை பாதிப்படைந்த அவர், சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தார்.
நான்கு நாட்களுக்கு முன், தண்ணீர் பாய்ச்சும் நோக்கில், தோட்டத்துக்கு சென்றார். எதிர்பாராத விதமாக கால் தவறி 20 அடி ஆழ கிணற்றில் விழுந்தார்.
உதவி கேட்டு கூச்சலிட்டும், யாருக்கும் கேட்கவில்லை. பைப்பை பிடித்து கொண்டு கிணற்றில் இருந்தார். இவர் ஒற்றை சமையல் காஸ் சிலிண்டர் வாங்கி தரும்படி, தனக்கு அறிமுகமான கணேஷ் என்பவரிடம் கேட்டிருந்தார்; அதற்கான ஆவணங்களையும் கொடுத்திருந்தார். புதிய சிலிண்டருக்கு சீனிவாஸ் ஆச்சார்யாவிடம், 'ஓடிபி' தேவைப்பட்டது.
நேற்று முன் தினம் அவரது வீட்டுக்கு வந்த பார்த்த போது, அவரை காணவில்லை. அதன்பின் அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் கணேஷ் தேட துவங்கினார். தோட்டத்துக்கு சென்று பார்த்த போது, கிணற்றில் விழுந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த தீயணைப்பு படையினர், கிணற்றில் இருந்த சீனிவாச ஆச்சார்யாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, அவர் குணம் அடைந்துள்ளார்.
