எஸ்.ஐ.ஆர்., பணிகளை பொறுப்புடன் கையாள தேர்தல் அதிகாரி அறிவுரை
எஸ்.ஐ.ஆர்., பணிகளை பொறுப்புடன் கையாள தேர்தல் அதிகாரி அறிவுரை
ADDED : ஜூலை 29, 2026 02:58 AM

பெங்களூரு: ''எஸ்.ஐ.ஆர்., பணிகளை, பி.எல்.ஏ.,க்கள், - இ.ஆர்.ஓ.,க்கள் பொறுப்புடன் கையாள வேண்டும்,'' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு மத்திய மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் தலைமையில் இ.ஆர்.ஓ., எனும் தேர்தல் பதிவு அதிகாரிகள், பி.எல்.ஏ., எனும் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளுடன் நேற்று, எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பெயர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல், எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடத்த வேண்டும். தகுதியான வாக்காளர்கள் யாரும் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்கை அடைய வேண்டும். இதற்காக அதிகாரிகள் குழுவாக ஒருங்கிணைந்து பணியாற்றினால், பணிகள் விரைவில் முடிவடையும்.
வராதவர்கள், இடம் மாறியவர்கள், இறந்த வாக்காளர்களை அடையாளம் காணும் பணிகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இறந்த வாக்காளர்களின் விஷயத்தில் இறப்பு சான்றிதழ் பெற வேண்டும்.
அது கிடைக்கவில்லை என்றால், அண்டை வீட்டார் அல்லது வட்டார சட்ட உதவியாளர்களின் கையெழுத்துடன் ஒரு 'மகஜர்' தயாரிக்கும்படி அறிவுறுத்துங்கள்.
எஸ்.ஐ.ஆர்., வெற்றி பெற, பி.எல்.ஓ.,க்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். எனவே, உயர் அதிகாரிகளும், வி.ஆர்.ஓ.,க்களும் வாக்காளர்களிடம் முறையாக தகவலை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இணை முதன்மை தேர்தல் அதிகாரி ராகவேந்திரா, கூடுதல் வருவாய் கமிஷனர் ரங்கநாத், இணை கமிஷனர் ஹேமந்த், பெங்களூரு மத்திய மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
