வணிக, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் அதிரடி உயர்வு
வணிக, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் அதிரடி உயர்வு
ADDED : மார் 05, 2026 05:17 AM
பெங்களூரு: கர்நாடகாவில் வணிக, தொழிற்சாலைகளில் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 10 பைசா முதல் 95 பைசா வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் இயங்கும் ஐந்து மின்சார விநியோக நிறுவனங்களும் சுமார் 1,254 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்து உள்ளன. இதை ஈடுகட்டுவதற்கு மின்சார கட்டணம் உயர்வு குறித்து பரிசீலிக்கப்பட்டது.
இந்த மின்சார கட்டண உயர்வு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தகவல் வெளியாகியது. இதற்கு, வணிகர்கள், தொழிலதிபர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், கடந்த மாதம் 20ம் தேதி மின்சார கட்டண உயர்வு அமலுக்கு வராது என கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 10 பைசா முதல் 95 பைசா வரை உயர்த்தப்பட்டு உள்ளதாக நேற்று முன்தினம் கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. மின் கட்டண உயர்வு, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, சிறிய அளவிலான வணிக நிறுவனங்களுக்கு 7 ரூபாயாக இருந்த ஒரு யூனிட் மின்சார கட்டணம்; பத்து பைசா உயர்த்தப்பட்டு 7.10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, தொழிற்சாலைகளில் 4.50 ரூபாயாக இருந்த ஒரு யூனிட் மின்சார கட்டணம்; 5.20 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மால்கள் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் வணிக வளாகங்களில் 5.95 ரூபாயாக இருந்த ஒரு யூனிட் மின்சார கட்டணம்; 6.90 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, வணிகர்கள், தொழிலதிபர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
