மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்? யூனிட்டிற்கு 45 பைசா வரை அதிகரிக்கும்
மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்? யூனிட்டிற்கு 45 பைசா வரை அதிகரிக்கும்
ADDED : மார் 31, 2026 04:32 AM
பெங்களூரு: ஏப்ரலில் இருந்து வீடு மற்றும் பொது மின் உபயோக நுகர்வோருக்கு, மின் கட்டணத்தை, யூனிட்டிற்கு, 40 முதல் 45 பைசா வரை உயர்த்த, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த போது, கிரஹஜோதி உட்பட ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியது. கிரஹஜோதி திட்டத்தின்படி, 200 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தினால், மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவித்தது. அதன்படியே, செயல்பட்டும் வருகிறது.
இது, மாநிலத்தில் மின்சாரத்தை வினியோகிக்கும் பெஸ்காம் என்ற, பெங்களூரு மின் வினியோக நிறுவனம்; ஜெஸ்காம் என்ற, கலபுரகி மின் வினியோக நிறுவனம்; செஸ்காம் என்ற சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம்; ஹெஸ்காம் என்ற ஹூப்பள்ளி மின் வினியோக நிறுவனம்; மெஸ்காம் என்ற மங்களூரு மின் வினியோக நிறுவனம் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக மாறி உள்ளது.
இது தொடர்பாக, கே.இ.ஆர்.சி., என்ற கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், சமீபத்தில் வருடாந்திர செயல்திறன் அறிக்கையை, மின் வினியோக நிறுவனங்கள் சமர்ப்பித்தன. அதில், 'மின் வினியோக நிறுவனங்களுக்கு மொத்தம், 4,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த இழப்பை ஈடு செய்ய, எஸ்காம் நிறுவனங்களுக்கு, ஒரு யூனிட்டிற்கு, 68 பைசா வரை கட்டணத்தை உயர்த்த வேண்டும்' என்று முன்மொழிந்திருந்தன.
இருப்பினும், இந்த முன்மொழிவை பரிசீலித்த ஆணையம், 'வீடு மற்றும் பொது மின் உபயோக நுகர்வோருக்கு, 40 முதல் 45 பைசா வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மொத்த இழப்பான, 4,900 கோடி ரூபாயில், பெஸ்காமுக்கு மட்டும், 50 சதவீத இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், பெஸ்காம் நுகர்வோர் ஒரு யூனிட்டுக்கு, 55 பைசா அளவுக்கு கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது மாநிலத்தில் தாவணகெரே தெற்கு, பாகல்கோட்டை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால், மின் கட்டணம் உயர்வு தொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவை தற்போது வெளியிட இயலாது.
எனவே, ஏப்., 9 ம் தேதிக்கு பின், ஏப்., 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு கட்டண திருத்த உத்தரவு வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
