/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவசாயி வீட்டை துவம்சம் செய்த யானை
/
விவசாயி வீட்டை துவம்சம் செய்த யானை
ADDED : ஏப் 22, 2025 05:19 AM

சாம்ராஜ்நகர்: திருமணத்துக்கு சென்றிருந்த விவசாயி வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது.
சாம்ராஜ்நகர் தாலுகாவின், மூகனபாளையா கிராமத்தில் வசிப்பவர் நாகேஷ் நாயக், விவசாயி. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக, வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை ஊருக்கு திரும்பினர். வீட்டை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடு சேதமடைந்து துவம்சமாகி பொருட்கள் சிதறிக் கிடந்தன. அக்கம், பக்கத்தினரை விசாரித்தபோது, வீட்டை துவம்சம் செய்தது காட்டு யானை என்பது தெரிந்தது.
மூகனபாளையா கிராமத்தில், நேற்று முன் தினம் இரவு காட்டுயானைகள் கூட்டம் புகுந்தன. நானக் பாய் என்பவரின் நிலத்தில் விளைந்திருந்த தக்காளி, பீன்ஸ் பயிர்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தின.
அங்கிருந்த ஒரு பலா மரம், ஒரு மாமரம், எட்டு தென்னங்கன்றுகளை மிதித்து பாழாக்கின. அவரது வீட்டையும் துவம்சம் செய்தன. இதனால் அவருக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாகேஷ் நாயக் கூறியதாவது:
நாங்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானைகள் தொந்தரவு, மிகவும் அதிகம். இதுகுறித்து வனத்துறையினரிடம் பல முறை புகார் அளித்தும் பயன் இல்லை. உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று, திரும்புவதற்குள் எங்கள் வீடு, பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
தற்போது நாங்கள் வசிக்க வீடு இல்லாமல் அவதிப்படுகிறோம். வனத்துறையினர் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். யானைகளின் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.