ADDED : நவ 04, 2025 04:43 AM

சிக்கமகளூரு:  சிக்கமகளூரில் இருவரை மிதித்துக் கொன்ற யானையை, 'கும்கி' யானைகளை கொண்டு வனத்துறையினர் பிடித்தனர்.
சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரியின் கெரேகட்டே கிராமத்தில், ஹரிஷ் ஷெட்டி, உமேஷ் கவுடா ஆகிய இருவரையும், ஒற்றை யானை மிதித்துக் கொன்றது. இதனால் கோபமடைந்த கிராம மக்கள், உடலை அகற்றாமல் அரசுக்கும், வனத்துறைக்கும் எதிராக போராட்டம் நடத்தினர்.
இதையறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, உடலை அகற்றும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் இதை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். யானையை பிடிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அரசின் உத்தரவுப்படி, நேற்று முன்தினம் ஆறு 'கும்கி' யானைகள் சிருங்கேரிக்கு வந்தன. நேற்று காலை ஒற்றை யானையை பிடிக்கும் பணியை துவக்க வனத்துறையினர் நினைத்தனர்.
ஆனால், அதற்குள் சிருங்கேரியின் பகவதி என்ற பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இரவு நேரத்தில் யானையை பிடிக்கும் முயற்சியில் 'கும்கி' யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. பல மணி நேர போராட்டத்துக்கு பின், ஒற்றை யானையை வனத்துறையினர் பிடித்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

