/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு ஆரண்யபவனில் 'ரிலாக்ஸ் மூடில்' யானைகள்
/
மைசூரு ஆரண்யபவனில் 'ரிலாக்ஸ் மூடில்' யானைகள்
ADDED : ஆக 06, 2025 08:18 AM

மைசூரு : ஹூன்சூர் வீரனஹொசஹள்ளியில் இருந்து புறப்பட்ட ஒன்பது தசரா யானைகளும், மைசூரு ஆரண்யபவனில் ஓய்வெடுத்தன. வரும் 10ம் தேதி அரண்மனைக்குள் நுழைகின்றன.
மைசூரு தசராவில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் ஹூன்சூரின் வீரனஹொசஹள்ளியில் இருந்து முதல்கட்டமாக ஒன்பது யானைகள் புறப்பட்டன. அன்று மாலையில், மைசூரு நகரின் அசோகபுரத்தில் உள்ள ஆரண்யபவனை சென்றடைந்தன.
வனப்பகுதியில் இருந்து நகருக்கு வந்த யானைகள், 'ரிலாக்ஸ் மூடில்' இருந்தன. யானைகள் வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, நகரின் பல பகுதிகளில் இருந்தும் பொது மக்கள், குடும்பத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர். ஒரே இடத்தில் ஒன்பது யானைகளை பார்க்கும் குழந்தைகள் குதுாகலம் அடைந்தனர்.
வரும் 10ம் தேதி மாலை 6:40 மணி முதல் இரவு 7:20 மணிக்குள் மைசூரு அரண்மனை ஜெயமார்தாண்டா நுழைவு வாயிலை கடக்கும். முதன் முறையாக யானைகள் மாலை நேரத்தில் அரண்மனை வளாகத்துக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றன.
யானைகளுக்கு தேவையான உணவுகளை பாகன்கள், உதவியாளர்கள், குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
மைசூரு வனத்துறை துணை அதிகாரி பிரபு கவுடா கூறுகையில், ''முகாமில் இருந்து நகருக்கு வந்த யானைகளின் உடல் நிலை சோதிக்கப்பட்டு, ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. இங்கு வந்த யானைகள், ஏற்கனவே தசராவில் பங்கேற்றுள்ளதால், இந்த சீதோஷ்ண நிலையை ஏற்றுக் கொண்டன. தொலைவில் இருந்து யானைகளை பார்க்க, மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.