/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பீரங்கி ஒத்திகையில் பங்கேற்ற யானைகள்
/
பீரங்கி ஒத்திகையில் பங்கேற்ற யானைகள்
ADDED : செப் 23, 2025 11:37 PM

மைசூரு : மைசூரு தசரா கண்காட்சி மைதானத்தில் நேற்றும் யானைகளுக்கான பீரங்கி வெடிகுண்டு ஒத்திகை நடத்தப்பட்டது.
மைசூரு தசராவில் பங்கேற்பதற்காக அபிமன்யு தலைமையில் ஒன்பது யானைகளும், சுக்ரீவன் தலைமையில் ஐந்து யானைகளும், மைசூருக்கு கடந்த மாதம் வந்தன. இந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை, மாலை நேரங்களில் யானைகளுக்கு அ ரண்மனையில் இருந்து பன்னி மண்டபம் வரை 5 கி.மீ., தொலைவுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
அக்., 2ம் தேதி நடக்கும் ஜம்பு சவாரியில் தசரா யானைகள் பங்கேற்கின்றன. அப்போது பீரங்கி குண்டுகள் வெடிக்கப்படும். இந்த சத்தத்தால் யானைகள் மிரளக்கூடாது என்பதற்காக மூன்றாவது முறையாக, நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் 14 யானைகள், 30க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவில் பாரம்பரிய தசரா வரும் 25ம் தேதி நடக்கிறது. இங்கு நடக்கும் ஊர்வலத்தில் பங்கேற்க, மகேந்திரா, காவேரி, லட்சுமி ஆகிய மூன்று யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த யானைகள் இன்று மாலை புறப்பட்டு, ஸ்ரீரங்கபட்டணாவுக்கு செல்கின்றன. இவ்விழாவில் பங்கேற்ற பின், நாளை மைசூரு திரும்புகின்றன.
வனத்துறை அதிகாரி பிரபுகவுடா கூறியதாவது:
யானைகளுக்கான அனைத்து வகையான பயிற்சியும் முடிந்துள்ளன. மரத்தில் செய்யப்பட்ட அம்பாரியை சுமக்கும் பயிற்சி இரண்டு முறை நடந்துள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே இந்த பயிற்சி மேற்கொள்ளப்படும். யானைகள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளன. பாகன்கள் கொடுக்கும் உத்தரவுகளுக்கு அனைத்து யானைகளும் கட்டுப்படுகின்றன.
யானைகள் நடைபயிற்சியில் ஈடுபடும் போது, பொது மக்கள் துாரத்தில் நின்றபடி பார்க்கவும். சத்தம் போடுவதால், யானைகளுக்கு இடையூறு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.