ADDED : மார் 17, 2026 06:09 AM
பங்காருபேட்டை: பங்காருபேட்டை தாலுகாவின் எல்லையோர கிராமங்களில், யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
குல்லஹள்ளி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை பயிர்களை நாசமாக்கியது. கோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகர் என்ற விவசாயி, கடன் வாங்கி தன் தோட்டத்தில் முட்டைக்கோஸ் பயிரிட்டு இருந்தார்.
அறுவடைக்கு தயாராக இருந்த முட்டைக்கோஸ் தோட்டத்திற்குள் நுழைந்த அந்த யானை, பயிர்களை மிதித்து நாசமாக்கியது.
குல்ல ஹள்ளியை சேர்ந்த கொண்டப்ப நாயக்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரின் கேழ்வரகு வயல்களிலும் நுழைந்து கேழ்வரகு பயிரை தின்றும், மிதித்தும் அழித்தது.
ஒரு வருடம் முழுவதும் கடுமையாக உழைத்து வளர்த்த பயிர்களை அந்த யானை அழித்து விட்டது. வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள், காட்டு விலங்குகளால் அழிக்கப்படுவதால் விவசாயிகள் கண்ணீர் நடிக்கின்றனர்.
இந்த சம்பவங்கள் மட்டுமின்றி, இதற்கு முன்னரும் யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் ஏராளமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
யானைகளின் அட்டகாசத்தை தடுக்கும்படி, வனத்துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த பலனும் இல்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் குறைந்தபட்சம் யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவதோடு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என, பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
