/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமண செலவுக்கும் வந்தாச்சு இ.எம்.ஐ.,
/
திருமண செலவுக்கும் வந்தாச்சு இ.எம்.ஐ.,
ADDED : ஏப் 14, 2025 07:07 AM

பெங்களூரு : திருமணம் என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடலை தாண்டுவது போன்றதாகும். அத்தகையோருக்காக, தனியார் நிறுவனம் ஒன்று, திருமணத்துக்கான செலவை ஏற்பதாகவும், அதற்கான தவணையை மாதந்தோறும் செலுத்தும்படி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'திருமணம் செய்து பார், வீட்டை கட்டி பார்' என்ற பழமொழி உண்டு. திருமணம் என்பது பெண்ணை பெற்ற பெற்றோருக்கு, கடலை தாண்டுவது போன்றதாகும். திருமணத்துக்கான வரதட்சணை, சீர்வரிசை, ஆடைகள், திருமண மண்டபம், உணவு என அவரவர் வசதிக்கு ஏற்ப நடத்தி வைப்பர்.
இதுபோன்று நம் மகன், மகளுக்கும் திருமணம் செய்து வைக்க, நடுத்தர குடும்பத்தினர் ஆசைப்படுவர்.
ஆனால் செலவை பார்த்து, ஒரே நேரத்தில் அவ்வளவு தொகையை செலுத்த முடியாமல் தவிர்ப்பர்.
இத்தகையவர்களின் வருத்தத்தை போக்க, பெங்களூரில் பல, 'வெட்டிங் பிளானிங்' நிறுவனங்கள் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
அதாவது நகைகள், ஆடைகள் தவிர, மற்ற செலவுகள் அனைத்தையும் இந்நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும். இதற்கான தொகையை, மணமகன், மணமகள் வீட்டினர், மாதந்தோறும் தவணை முறையில் கட்ட புதிய ஆபரை அறிமுகம் செய்துள்ளனர்.
'பிளான் வெட்டிங்' என்ற நிறுவனம், நிச்சயதார்த்தத்துக்கு 2.99 லட்சம் ரூபாய்; முகூர்த்தத்துக்கு 5.35 லட்சம் ரூபாய்; வரவேற்புக்கு 4.80 லட்சம் ரூபாய்; மூகூர்த்தம், வரவேற்புக்கு 8.20 லட்சம் ரூபாய் என கட்டணம் நிர்ணயித்து உள்ளது. இந்நிறுவனம், 60 மாதம் வரை தவணை முறையை அறிமுகம் செய்து உள்ளது.
இதுபோன்று, 'மேரி நவ் பே லேட்டர்' என்று நிறுவனமும், வாடிக்கையாளர்கள் கேட்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறது. இந்நிறுவனமும் 60 மாதம் வரை தவணை முறையை அறிவித்து உள்ளது.
இதற்கு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண்ணுக்கு 23 வயது இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 30,000 ரூபாய் ஊதியம் பெற வேண்டும்.
மூன்று மாத வங்கி கணக்குகள், மூன்று மாத சம்பள பில், ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிறுவனங்கள் திருமண மண்டபம், உணவு, பூக்கள் அலங்காரம், புகைப்படம், வீடியோகிராபர், திருமணத்துக்கு தேவையான பொருட்கள், அலங்காரங்கள், அலங்கார விளக்குகள், திருமண ஆல்பம், மணமகள் அலங்காரம், ஒளி - ஒலி, டி.ஜே., போன்றவற்றை ஏற்பாடு செய்வர்.
ஒரே நேரத்தில் பல லட்சம் ரூபாய் செலவழிப்பதை தவிர்த்து, மாதந்தோறும் தவணையை செலுத்துவதால் பாதிப்பும் இல்லை என்பதால், இந்த திட்டத்துக்கு பெற்றோர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

